விருந்தினர் விடுதி இலவச பயிற்சி நெறிகள் ஆரம்பம்

வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தால் இளைஞர், யுவதிகளுக்கான விருந்தினர் விடுதி இலவச பயிற்சி நெறிகள் காரைநகரில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் நிர்வாக தலைவர் பி.யோ.சுந்தரேசன் தெரிவித்தார்.

P.YO.Suntharesan

யாழிலுள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் திங்கட்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துக்கூறும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் வளர்ச்சியானது சுற்றுலாத்துறையை நோக்கி தற்போது செல்கின்றது. 2014 ஆம் ஆண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை 2.5 மில்லியன் சுற்றுலா பயணிகள் நாட்டுக்குள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அவர்கள் தமது தங்குமிடங்களை தேர்ந்தெடுப்பதற்கு இங்கு விடுதிகள் குறைவாக உள்ளது. குறிப்பாக வடமாகாணத்தில் விருந்தினர் விடுதிகள் அரிதாகவே காணப்படுகின்றன.

விருந்தினர் விடுதிப் பயிற்சி நெறியை ஆரம்பிப்பதன் மூலம் வடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு பெறுவதற்கு சிறந்த சந்தர்ப்பமாக அமையும். அது மட்டுமல்லாது வடபகுதியில் விடுதிகள் சிறப்புற செயற்பட வாய்ப்பும் உள்ளது.

6 மாத காலங்களைக் கொண்டதாக இந்த பயிற்சி நெறி அமைந்துள்ளது. இதில் முதற்கட்டமாக 160 பேர் உள்ளடக்கப்படவுள்ளனர். அனுமதி கட்டணமாக 1250 ரூபாய் அறவிடப்படும். இந்த 6 மாத காலப்பகுதியில் முதல் 3 மாதங்கள் தகைமை விருத்தி தொடர்பான கற்கைநெறிகள் வழங்கப்படும்.

கற்கைநெறிவின் முடிவில் சர்வதேச தரம் வாய்ந்த என்.வி.க்யூ வகைச்சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதன் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 20ஆம் திகதி காரைநகரில் அமைந்துள்ள தொழில் பயிற்சி அதிகார சபையில் இடம்பெறவுள்ளது.

இந்த பயிற்சி நெறியில் இணைந்துகொள்ளவுள்ள மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வு 19 ஆம் திகதி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறும். இதற்கான விண்ணப்பங்களை யாழ் வீரசிங்கம் மண்டப கட்டிடத்தில் அமைந்துள்ள இலங்கை தொழில் பயிற்சி சபையின் உதவிப்பணிமனைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

அவ்வாறு அனுப்ப தவறுபவர்கள் 19ஆம் திகதி இடம்பெறும் நேர்முகத்தேர்வில் சமர்ப்பிக்க முடியும். இந்தக் கற்கைநெறியில் 18 வயது தொடக்கம் 35 வயது வரையுள்ள இருபாலாரும் விண்ணப்பிக்க முடியும். கற்கைநெறி பயில இணைபவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்படும்.

தூர இடங்களில் இருந்து வருகைதரும் 25 மாணவர்களுக்கான தங்குமிட வசதி, உணவு, பகுதிநேர வேலைவாய்ப்பு என்பன வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Posts