விநியோகஸ்தர்கள்தான் லிங்கா படத்தை கொன்றுவிட்டார்கள்: தயாரிப்பாளர் ஆவேசம்

ரஜினி நடித்த லிங்கா படம் கடந்த மாதம் 12–ந்தேதி ரிலீசானது. இந்த படத்தால் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும். எனவே நஷ்டஈடு வேண்டும் என கோரியும் விநியோகஸ்தர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த பிரச்சினையில் ரஜினி தலையிட்டு நஷ்டஈடு பெற்று தர வேண்டும் என்று கோரி விநியோகஸ்தர்கள் நேற்று வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 10 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். இதில் பல விநியோகஸ்தர்கள் கலந்துக் கொண்டனர்.

இதுகுறித்து லிங்கா படத்தின் தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷும், படத்தை வெளியிட்ட அம்மா கிரியேஷன்ஸ் சிவாவும் கலந்துக் கொண்ட பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

அப்போது ராக்லைன் வெங்கடேஷ் பேசும்போது, நான் 30 வருடமாக சினிமா துறையில் இருக்கிறேன். நான் சிறு வயதில் இருந்தே ரஜினியின் ரசிகன். 12 வருடங்களுக்கு முன் ரஜினி எனக்கு நண்பரானார்.

ரஜினிதான் என்னை அணுகி படத்தை தயாரிக்க சொன்னார். கடவுள்தான் இந்த பாக்கியத்தை கொடுத்தாக கருதினேன். படம் பூஜை போடும்போதே ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12-ம்தேதி வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து கஷ்டப்பட்டு உழைத்தோம்.

பணத்தில் எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக நானே கடன் வாங்காமல் என் முழு பணத்தையும் முதலீடு செய்தேன்.

நான் தயாரித்த படத்தை ஈராஸ் நிறுவனத்திடம் விற்றோம். அவர்கள் அம்மா கிரியேஷன்ஸ் மூலமாக வெளியிட்டனர். படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், படம் வெளியான உடனேயே படம் சரியில்லை, எந்த ஷோவும் ஃபுல்லாகவில்லை என்று இவர்களே கூறிவிட்டார்கள். இதனால் மக்கள் வரத்து குறைந்துவிட்டது.

படத்தை புரமோசன் செய்யுங்கள் என்று என்னிடம் கூறியிருந்தால் நான் ரஜினியிடம் பேசி அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருப்போம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை.

இதைப்பற்றி ரஜினியிடம் நான் பேசியபோது, 5 வாரங்கள் போகட்டும் அதன்பின் ஓடவில்லை என்றால் அதற்கான தீர்வை எடுக்கலாம் என்று கூறினார்.

ஆனால் விநியோகஸ்தரான சிங்கார வேலன் சிறிது நாட்களிலேயே படம் ஓடவில்லை என்று கூறி உண்ணாவிரதம் அளவிற்கு கொண்டு வந்துவிட்டார். அவர் பப்ளிசிட்டிக்காக இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார்.

45 கோடியில் படத்தை தயாரித்து ரூ. 200 கோடிக்குமேல் லிங்கா படத்தை வியாபாரம் செய்திருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். நான் செய்த செலவுகளையும் படத்தை விற்றதற்கான ஆதாரத்தையும் நான் காண்பிக்கிறேன்.

அவ்வாறு ரூ. 200 கோடிக்கு மேல் விற்கப்பட்டதற்கான ஆதாரத்தை காண்பித்து நிரூபித்தால் நான், அவர்கள் என்ன செய்ய சொல்கிறார்களோ அதை நான் செய்கிறேன்.

அப்படி இல்லையெனில் பகிரங்கமாக எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் விநியோகஸ்தர்கள்தான் லிங்கா படத்தை கொன்று விட்டார்கள் என்றும் ஆவேசமாக பேசினார்

அம்மா கிரியேஷன்ஸ் சிவா பேசும்போது, விநியோகஸ்தர்களே படம் சரியில்லை என்று பேசி பேசி படத்தை ஓடவிடாமல் செய்து விட்டார்கள்.

படத்தை வெளியிட்டவர் என்ற முறையில் இந்தப் பிரச்சனையை சமரசம் செய்ய முயற்சி செய்து வருகிறேன். ஆனால் அதற்குள் விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம் வரைக்கும் கொண்டு வந்து விட்டார்கள் என்றார்.

Related Posts