தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு கண்டி எண்கோண மண்டபத்திலிருந்து அவர் நாட்டுமக்களுக்கு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டின் ஜனாதிபதியாக என்னை தெரிவு செய்த அனைத்து மக்களுக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
இந்த நாட்டிலிருக்கின்ற அனைவரும் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் பெளத்தர்கள் என்ற இனமத பேதங்கள் பாராது அனைத்து மக்களும் ஒன்றிணைந்து சகோதரத்துவமாக இந்த நாட்டில் வாழ வேண்டும்.
எமது நாட்டை பொறுத்த வரையில் பொருளாதாரத்தை அதிகமாக ஈட்டித் தரும் துறையாக விவசாயம் காணப்படுகிறது. எனவே எனது நூறு நாள் வேலைத் திட்டத்தில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக நவீன தொழில் நுட்ப வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
அத்துடன் சாதாரண மக்களின் வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் பக்கச்சார்பற்ற பொலிஸ் திணைக்களத்தை உருவாக்குவதன் மூலம் சட்ட ஒழுங்கை நிலை நாட்டி இலஞ்சம், ஊழல் மற்றும் தேவையற்ற செயற்பாடுகள் இல்லாது நாட்டை சமாதான பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும். அதற்கான நடவடிக்கையில் எமது அரசு ஈடுபடும்.
சர்வதேசத்திலும், தேசிய ரீதியிலும் இணக்கப்பாட்டை கட்டி எழுப்பி நல்லுறவை பேணுவது எமது தலையாய கடமையாகும் எனவே நாட்டு மக்கள் அனைவரும் மனிதாபிமானத்துடனும் சகோதரத்துடனும் ஒன்றிணைந்து தேசிய அரசினை உருவாக்குவதற்கு அனைத்து கட்சிகளும் எம்முடன் ஒன்றிணைய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
எனது முதலாவதும் இறுதியுமான தேர்தல் இது. இந்த தேசத்திற்கு தேவையானவர் அரசன் அல்ல மாறாக நல்ல ஒரு மனிதனே என அவர் தனது கன்னி உரையில் குறிப்பிட்டுள்ளார்.