இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலிருந்தும் மலையகத் தோட்டப் பிரதேசங்களிலிருந்தும் அளிக்கப்பட்ட வாக்குகளிலேயே தான் தோல்வியடைந்துள்ளதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மற்றபடி, தான் தோல்வி அடைந்ததாகக் கருதவில்லை என்றும் மகிந்த ராஜபக்ஷ தனது சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் மக்களை சந்தித்தபோது கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ஷ, அலரி மாளிகையிலிருந்து வெளியேறி ஹம்பாந்தோட்டையில் மெதமுலனவில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு திரும்பியிருந்தார்.
அங்கு கூடியிருந்த பெருமளவிலான ஊர்மக்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆறுதல் கூறினார்கள்.