கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் நேற்று இரவு இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஆறு வயது சிறுகுழந்தை உள்ளிட்ட பலர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலை நடத்திய சிப்பாய் மனநிலை பாதிக்கப்பட்டவரென கூறி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
அந்தப் பகுதியினில் தையலகம் நடத்தி வந்திருந்த பொதுமகன் ஒருவரை சிப்பாயொருவர் சீருடையுடன் வந்து தாக்கியுள்ளார். அதில் சிவராசா(வயது 46) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
அதையடுத்து மக்கள் திரண்டு படைமுகாம் முன்பதாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவாகள் மீது படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய தாக்குதலில் ஆறு வயதேயான பிறின்ஸி என்றழைக்கப்படும் சதீஸ்குமார் சதுஸிகா(வயது 6) படுகாயமடைந்து வைத்தியசாலையினில் அவசர சிகிச்சை பிரிவினில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டம் செய்திருந்த தாயரொருவருடன் வந்திருந்த குழந்தையினை சிப்பாய் ஒருவர் காலால் மிதித்ததாலேயே அக்குழந்தை படுகாயமடைந்துள்ளது. என்றும் கூறப்படுகின்றது.
இதனிடையே இத்தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்திருந்த போதும் அவர்களை வைத்தியசாலைக்கு செல்ல படையினர் அனுமதிக்கவில்லையெனவும் தொடர்ந்தும் பதற்றம் நீடிக்கின்றது என்றும் தெரியவருகின்றது.