மைத்திரிக்கு வாக்களிக்குமாறு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை

எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும் என சமூகநீதிக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் சார்பாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் அ.இராசகுமாரன் சனிக்கிழமை (03) தெரிவித்தார்.

jaffna-uni-teachers

யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் சனிக்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

‘இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாரம்பரியமாக நீண்டகாலம் வாழ்ந்துவரும் தமிழர்களுக்கு, சிங்கள மக்களுக்கு சமமாக அனைத்து அரசியல் பொருளாதார உரிமைகளை பெற்று வாழும் உரிமை உண்டு.

இது மறுக்கப்பட்டது மட்டுமல்ல, தமிழ் இனத்தை அழிப்பதற்கு பல இன ஒடுக்குமுறைகள் கடந்த காலத்தில் நடைபெற்றன.

ஆனால் ஒடுக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக போராட்டங்கள் ஆயுத முனையில் அடக்கப்பட்டதன் காரணமாக தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்.

அந்த போராட்ட முறைகளை பயங்கரவாதம் எனக்கூறி தமிழர் உரிமைகளை ஜனநாயக வழியில் கொடுப்பதற்கு புலிகள் தடையாக இருப்பதாக அரசாங்கம் கூறியது.

புலிகளை அழித்து, கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பதவியில் இருந்து வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருந்தும், தமிழருக்கான அரசியல் உரிமை வழங்குவதில் தடையாக எந்தப் பயங்கரவாதமும் இல்லாத போதும், யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும், அரசியல் தீர்வுக்கான எந்த ஓர் முயற்சியும் எடுக்கவில்லை.

தமிழர் தரப்பு ஒன்று தற்போதைய ஜனாதிபதியுடன் மிக இறுக்கமான உறவை கொண்டிருந்தது. எனவே அரசின் தமிழ் தோழமைக் கட்சிகளுடன் இணைந்தாவது இந்த நாட்டில் தமிழர்களின் அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டு இலங்கை தீவில் நிரந்தரமான அமைதி ஏற்பட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அனைத்துக்கட்சி மாநாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றவில்லை என்பது எல்லாம் நொண்டிச் சாட்டாகும். கூட்டமைப்பு ஏற்கனவே பங்குபற்றி, கால இழுத்தடிப்பால் விலகிக்கொண்டது.

இப்படிப்பட்ட அணைத்து அதிகாரங்களையும் நாடாளுமன்ற நிறைவேற்று அதிகாரத்தையும் கொண்டிருந்த ஜனாதிபதியாலேயே தமிழர் பிரச்சினைக்கு கடந்த இரண்டு பதவிக்காலத்திலும் தீர்வு காணப்படவில்லையாயின், எதிர்காலத்தில் மீண்டும் பதவி ஏறினாலும் அவர் எதுவுமே செய்யமாட்டார் என்பது வெளிப்படையாகின்றது.

கடந்த காலத்தில் வாக்குறுதிகள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் எதுவும் செய்யாத தலைவர்களை விட வெளிப்படையாக எதுவும் கூறாத புதிய தலைவர், என்ன செய்யப்போகின்றார் என்ற கேள்வி எம்மக்கள் பலரிடம் இருக்கின்றது.

கடந்த 15 ஆண்டுகளாக எதுவும் செய்யாது அடக்குமுறையை அதிகரித்து தமிழ்மக்கள் மூச்சுக்கூட விடமுடியாது அவர்களை அடக்கிய தலைவரைவிட புதிய தலைவர் ஒருவருக்கு சந்தர்ப்பத்தை வழங்கி, அவர்களுடன் சேர்ந்து ஆட்சியில் பங்குகொண்டு, புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி, எமது உரிமைகளை புதிய வழியில் பெறுவதற்கு ஏன் முயற்சிக்கக்கூடாது.

உரிமைகளை பெற்றோமோ, இல்லையோ, அழிவடைந்து கொண்டு இருக்கும் எங்கள் இனத்தை அழிவின் விளிம்பில் இருந்து நிலைமையை மோசமாக செல்லவிடாது தடுப்பதற்கு புதிய ஒருவருடன் நாம் ஏன் கூட்டு சேரக்கூடாது.

புதிய தலைவர் மைத்திரியானால், இலங்கைத் தீவில் சிறுபான்மை மக்களுக்கு பெரியளவில் நன்மை சேராவிட்டாலும், சிறுபான்மையினரை அழிக்க முற்படும் பேரினவாதத்தில் இருந்து அழிப்பின் வேகத்தை ஓரளவுக்காவது கட்டுப்படுத்தி, அடுத்த நகர்வுக்கான தளத்தை அமைப்பதற்கு ஆட்சிமாற்றம் அவசியமாகும்.

பலமுறை வாக்களித்து, வாக்களிக்காது விட்டு ஏமாந்து அடிமைப்பட்டுப்போன தமிழினம் ஏற்கனவே ஏமாற்றியவருக்கு வாக்களிக்காமல், புதியவர் ஒருவரை தெரிவு செய்ய ஒன்றிணையுமாறும் தவறாது வாக்களிக்குமாறும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எமது மக்களை அன்பாக கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவித்தார்.

Related Posts