வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற நாம் இதுவரை காலமும் போராடினோம். போராடி வருகின்றோம். ஆனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் சிறுபான்மை இனத்தவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித செயற்பாடுகளும் செய்யவில்லையென சோசலிய சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பாணி விஜிசிறிவர்தன தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துக்கூறுகையில்,
அனைத்துலக தொழிலாளர் வர்க்கம் மேம்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே தேர்தலில் போட்டியிடுகின்றோம். தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளர்களுக்கும் நாங்கள் உதவி செய்யவில்லை. அனைத்து வேட்பாளர்களுக்கும் எதிராக தான் போட்டியிடுகின்றோம்.
இடதுசாரி கடசி என்பது தொழிலாளர் வர்க்கத்தை முன்னிலை படுத்துவதுதான் இந்தவகையில் நாம் தொழிலாளர் வர்கத்தினையே முன்னிலைப்படுத்தி நிற்கின்றோம் மற்றக் கட்சிகள் தொழிலாளர் வர்கத்தினை பற்றி பேசுவதிலலை.
இலங்கையில் மனித உரிமை தொடர்பில் அமெரிக்காவை தலையிடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகின்றது.
மனித உரிமை ரீதியில் லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்கா தலையிட்டு இறுதியில் எவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றது என்பது, அனைவரும் அறிந்ததே. கூட்டமைப்பினர், பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு மறைமுகமாக ஆதரவு வழங்குகின்றனர்.
தற்போது நாட்டிலுள்ள மக்கள் மீது இடம்பெற்றுவரும் வன்முறை சம்பவங்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ, பொது வேட்பாளர் மைத்திரி வென்றாலோ இன்னும் உக்கிரமடையும். இவர்களில் யார் வென்றாலும் வடக்கு கிழக்கிலுள்ள இராணுவத்தினர் ஒருவரை கூட குறைக்கமாட்டார்கள்.
மைத்திரி திறந்த பொருளாதாரத்தை கொண்டு நடத்துவேன் என்று கூறும் அதேநேரத்தில், சர்வதேச நாணய நியதிகளை மீறமாட்டேன் என்றும் கூறுகிறார். சர்வதேச வேலைத்திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நடைமுறைப்படுத்துகின்றார்.
ஆகவே இப்போதுள்ள அரசியல் அமைப்பை மாற்றி தொழிலாளர் வர்க்க அரசாங்கத்தை உருவாக்குவோம் என்று அவர் தெரிவித்தார்.