இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மஹிந்த ராஜபக்ஷ இரட்டை வேடம் போடுகிறார் என தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா நடுநிலை வகிக்க வேண்டும்.
ஆனால் மாறாக மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்துக் கூறியுள்ளார். இது கண்டனத்துக்குரியது.
இந்தத் தேர்தலில், தமிழர்களின் வாக்குகளைப் பெற மஹிந்த ராஜபக்ஷ ஒரு சில புதிய வாக்குறுதிகளை வழங்க முன் வந்துள்ளார்.
இறுதிக் கட்டப் போரில் ஆயிரக்கணக்கான தமிழர்களை இராணுவம் கொன்று குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக ஒரு புதிய வெளிப்படையான நீதி விசாரணை நடத்தப்படும் என்று அவர் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நான் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் வலியுறுத்தினர். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ இணங்கவில்லை.
சர்வதேச விசாரணை என்ற ஒன்றே தேவையில்லை என்றும் அப்போது அவர் கூறினார். தற்போது தேர்தல் என்றதும் போர்க் குற்றத் தவறுகளுக்கு விசாரணை நடத்தத் தான் தயாராக இருக்கிறார் என மஹிந்த ராஜபக்ஷ கூறுகிறார். இது அவரின் இரட்டை வேடம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை – என்று தெரிவித்திருக்கிறார்.