தமிழ் மக்களின் பிரச்சினைகளை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த அரசு தயாராகவே இருக்கிறது. இப்படித் தெரிவித்திருக்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார் பஸில். மஹிந்தவுக்கு ஆதரவாக ஊடகங்களிடம் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு:-
“தெற்கு மக்களுக்கு நல்லிணக்க சமிக்ஞையைக் காட்ட வடக்கு மக்களுக்கு இந்த ஜனாதிபதித் தேர்தல் அருமையானதொரு வாய்ப்பாகும். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உணர்ந்து புதியதொரு அரசியல் கலாசாரத்துக்கு அடித்தளமிட வேண்டும்.
வடக்கு மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான சக்தி எமது ஜனாதிபதிக்கே இருக்கின்றது. இதை விட தீர்வை வழங்க வேண்டும் என்ற கடப்பாட்டுடனேயே அவர் செயற்படுகின்றார்.
இதேவேளை, இலங்கையில் ஏனையவர்களோடு இணைந்து வாழ்வதற்கு தாம் தயார் என்ற சமிக்ஞையை வெளிப்படுத்துவதற்கு வடக்கு மக்களுக்கு முதல் தடவையாக அரியதொரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதை உரிய வகையில் பயன்படுத்தவேண்டும். இதற்கான சமிக்ஞையை தெற்கு மக்கள் ஏற்கனவே வெளிப்படுத்தி விட்டனர்.
வடக்கு அபிவிருத்தியையோ, யாழ். தேவி அனுப்பட்டதையோ அவர்கள் குறைகூறவில்லை. வடக்குக்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்குகிறீர்கள் என கேள்வி எழுப்பவில்லை. மாறாக இன்பமடைந்தனர். வடக்கு மக்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என தெற்கு மக்களுக்கு அக்கறை இருக்கிறது. தனது மூன்றாவது பதவி காலத்தில் இதை செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுப்பார்.
இதேசமயம் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த அரசு தயாராகவே இருக்கின்றது. எதிரணியின் பொதுவேட்பாளர் தமிழரின் பிரச்சினை குறித்து சிந்தித்துகூடப் பார்க்கவில்லை என்பதை அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் படம்போட்டு காட்டுகிறது.
முதலில் இனங்களுக்கிடையில் நம்பிக்கையை கட்டியெழுப்பவேண்டும். அதேபோல், அரசியல் நாகரிகத்துடன் முடிவுகளை எடுக்கும் அரசியல் கலாசாரமே அவசியம். இதற்கான சிறந்த அடித்தளத்தை கூட்டமைப்பால் இடமுடியும் என நினைக்கிறேன்.
நல்லிணக்கம் இன்றி முன்நோக்கி நகர முடியாது. எனவே, மூன்றாவது பதவிக் காலத்தில் இலங்கையை உலகின் உச்சத்துக்கே கொண்டுச் செல்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்” – என்றார்.