இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் காலமானார்

ரஜினிகாந்த, கமல் ஹாசன், சுஜாதா, சரிதா, உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழ் நடிகர்-நடிகையரை அறிமுகப்படுத்தியதுடன் சமூக சீர்திருத்த கருத்துகளுடன் கூடிய கதையம்சத்துடன் அமைந்த பல புரட்சிப் படங்களை இயக்கியதன் மூலம் ‘இயக்குனர் சிகரம்’ என புகழப்பட்ட கே.பாலசந்தர் இன்றிரவு காலமானார்.

bala

தஞ்சை மாவட்டம், நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி கிராமத்தில் 9-7-1930 அன்று பிறந்த கே.பாலசந்தர், மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படமாகும்.

இதில் கதாநாயகனாக நாகேஷ் நடித்திருந்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின.

அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை, வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி போன்ற படங்கள் இவரது தனி முத்திரையை திரையுலகில் பதிவு செய்த குறிப்பிடத்தக்க படங்களில் முக்கியமானவையாக கருதப்படுகின்றது.

தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம் செய்த இவர், 90-களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார்.

பாலச்சந்தரின் வெற்றிப்படங்களில் ஒன்றான நூற்றுக்கு நூறு தற்போது மறு தயாரிப்பு செய்யப்பட்டு வருகின்றது.

மேஜர் சந்திரகாந்த், இரு கோடுகள், பூவா தலையா, பாமா விஜயம், தாமரை நெஞ்சம், நான் அவனில்லை, புன்னகை, சிந்து பைரவி, அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை, ஜாதிமல்லி, நூற்றுக்கு நூறு, கல்கி போன்ற வெற்றிப் படங்களை தமிழில் இயக்கிய இவர் மரோசரித்ரா உள்ளிட்ட தெலுங்குப் படங்களையும் ஏக் துஜேகேலியே, ஜரா சி ஜிந்தகி, ஏக் நயீ பஹேலி போன்ற இந்திப்படங்களையும் இயக்கியுள்ளார்.

பல்வேறு பிலிம்பேர் விருதுகள், 1987-ல் பத்மஸ்ரீ விருது, 1987-ல் தாதாசாகேப் பால்கே விருது போன்ற சினிமாத்துறை விருதுகளை பெற்றுள்ள பாலசந்தருக்கு அண்மையில் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக சுவாசக் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து, 84 வயதான அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இன்றிரவு சுமார் 7 மணியளவில் காலமானார்.

அவரது உடலுக்கு ஏராளமான திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Posts