வடமாகாண முதலமைச்சரின் பேரில் ஒரு உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கைத் திறக்கக் கூட ஆளுநர் அனுமதிக்கின்றார் இல்லை. ஆனால் தம் பெயரில் ஆளுநர் நம்பிக்கை பொறுப்பு வங்கிக் கணக்கு என்று ஒன்றை வைத்திருந்து அதைச் செயல்படுத்தி வருகின்றார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முழங்காவிலில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இன்று எமது வடமாகாண அபிவிருத்தியானது ஏன் கிழக்கு மாகாண அபிவிருத்தி கூட எமது உறவுகளின் ஊக்குவித்தலிலும் உற்சாகத்திலும் தான் தங்கியுள்ளது. எம்மை அரசியல் ரீதியாகக் கட்டுப்படுத்தி, பல வித தடங்கல்களைத் தந்து, தடைகளைப் போட்டு தகுந்தவாறு அபிவிருத்தியடைய அரசாங்கம் விடுவதில்லை.
வடமாகாண முதலமைச்சரின் பேரில் ஒரு உத்தியோக பூர்வ வங்கிக் கணக்கைத் திறக்கக் கூட ஆளுநர் அனுமதிக்கின்றார் இல்லை. ஆனால் தம் பெயரில் ஆளுநர் நம்பிக்கை பொறுப்பு வங்கிக் கணக்கு என்று ஒன்றை வைத்திருந்து அதைச் செயல்படுத்தி வருகின்றார்.
நாங்கள் தனிப்பட்ட கணக்குகளைத் திறக்கலாம் தான். ஆனால் பாரிய பணம் அந்தக் கணக்குகளுக்கு வந்து சேர்ந்தால் உடனே அலுவலர்கள் கொழும்பிலிருந்து வந்து எங்கிருந்து வந்தது பணம், யார் அனுப்பினார்கள் இந்தப் பணத்தை? இது இங்கிருந்து சென்ற கறுப்பு பணம் வெள்ளை பணமாக மாற்றம் பெற்று இங்கு வந்த பணமல்லவா? தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கள் அனுப்பிய பணமல்லவா? புலிகளின் பணமல்லவா? பூனையின் பணமல்லவா? என்றெல்லாம் ஆராயத் தலைப்படுவார்கள்.
அவுஸ்திரேலியாவில் இருந்து சுகாதார அமைச்சர் மருத்துவ ரீதியான கருவிகள் வாங்க அங்கு எமது உறவுகள் கொடுத்த பணத்தை இங்கு வவுனியா வங்கியில் வைப்பிலிட அதுபற்றித் தேடத் தொடங்கி விட்டார்கள் எமது தேசிய தேடுநர்கள்! வங்கியின் சிரேஷ்ட அலுவலர்கள் கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். இது தான் இன்றைய நிலைமை.
அண்மையில் நான் திறைசேரி செயலாளரைச் சந்திக்க சென்றேன். முன்னர் ஜனாதிபதியை இவ் வருடம் ஜனவரி மாதம் 2ஆம் திகதி சந்தித்த போது ரூபாய் நூறு மில்லியனுக்கு குறைந்த தொகையினைக் கொண்ட சிறிய செயற்திட்டங்கள் தொடர்பான வெளிநாட்டுப் பணங்களை எமது வங்கி கணக்குகள் ஊடாக இங்கிருந்து நாங்கள் பெற ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
ஏன் என்றால் அந்தச் சமயத்தில் அப்பணங்களை செயற்றிட்டங்கள் சம்பந்தமாகக் கொண்டு வரும் போது அவை வெளிநாட்டு வளங்கள் சார்பான திணைக்களத்தின் ஊடாகக் கொண்டு வரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதுபற்றி ஜனாதிபதி அவர்கள் திறைசேரி செயலாளருடன் பேசச் சொல்லியிருந்தார்.
திறைசேரி செயலாளர் பி.பி.ஜயசுந்தர அவர்களை நான் அண்மையில் சந்தித்த போது அவர் மிக வினயமாக உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கொன்றைத் திறந்தீர்களானால் அதற்கு வெளிநாட்டுப் பணங்களை நேரடியாக வரச் செய்யலாம் என்று கூறினார். தாங்கள் தடைகள், தவிர்ப்புக்கள் எதனையும் ஏற்படுத்த மாட்டார்கள் என்றும் கூறினார். அதுமட்டுமல்ல. ஏன் அவ்வாறு செய்ய எம்மை அனுமதிக்கின்றார் என்றும் கூறினார்.
அதாவது உத்தியோகபூர்வ வங்கிக் கணக்குகள் யாவும் கணக்காய்வாளர் நாயகத்தினால் கணக்காய்வு செய்யப்படுவதால் அவை சம்பந்தமாக கணக்காய்வாளர் நாயகம் மூலம் திறைசேரி கட்டுப்பாட்டை வைத்திருக்கும் என்று கூறினார்.
எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி இரண்டொரு நாட்களுக்குத்தான். யாழ்ப்பாணந் திரும்பியதும் அறிந்தேன் எமக்கான உத்தியோகபூர்வ கணக்கான ‘முதலமைச்சர் வங்கிக்கணக்கை’ முடக்கிவிட்டுள்ளார் எமது முன்படைத்தளபதியான ஆளுநர் என்று. உத்தியோகபூர்வமான கணக்கை நாங்கள் திறக்க முடியாதென்றால் திறைசேரி செயளாலர் கூறியவாறு வெளிநாட்டில் இருந்து பணத்தைத் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு கொண்டுவரும் போது அவை திறைசேரியினால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவன.
தேவையெனில் வங்கிக் கணக்கை ஸ்தம்பிக்கவும் செய்யலாம் அவர்கள். இப்பொழுது வெளிநாட்டுப் பணங்களை நாங்களே நேரடியாக மக்கள் நலன் கருதிப் பாவித்து வருகின்றோம். அதாவது வெளிநாட்டிலுள்ள எமது உறவுகள் தாமாகவே நேரடியாக எமக்கு உதவிசெய்து வருவதை வரவேற்கின்றோம். நாம் நடுவில் இருந்து நற்செயல்கள் நடைபெறுவதை உறுதி செய்து வருகின்றோம்.
ஒரு வாரத்திற்கு முன்னர் என்னைச் சந்திக்க என் பால்ய காலத்து நண்பர் ஒருவர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவர் ஒரு சிங்கள நண்பர். சுவீடனில் கடந்த 40 வருடங்களுக்கு மேல் வசித்து வருகின்றார். அவர் ஒரு முக்கியமான விடயத்தை எனக்குத் தெரிவித்தார்.
‘விக்னேஸ்! உன் பால்ய நண்பன் உலகளாவிய புகழைப் பெறப் போகின்றான்!’ என்றார். எனக்கு எதுவும் விளங்கவில்லை. ‘நான் எனது ஒரு புதிய கண்டுபிடிப்பை அமெரிக்காவில் பதிவு செய்துள்ளேன். அதாவது கடலலைகள் ஊடாக மின்சக்தி பெறுவதை நான் கண்டு பிடித்துள்ளேன். அதனை இப்பொழுது அமெரிக்காவும் சீனாவும் உத்தியோகபூர்வமாகப் பரிசீலித்து வருகின்றார்கள். அதனை அவர்கள் ஏற்றால் பெற்றோல், டீசல் போன்றவைக்குப் பதிலாக இனி கடல் மின்சக்தியைப் பாவிக்க முடியும்’ என்றார்.
உலகம் எங்கே செல்கின்றது என்று பாருங்கள்! புதிய ஒரு மின்சக்தி முறை பாவனைக்கு வந்தால் மத்திய கிழக்கு நாடுகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாவார்கள். உலக நடமாட்டமே மாறிவிடும். மாசடைந்த சூழல் மறுசீரமைப்புக்குள்ளாக்கப்படும். இவற்றையெல்லாம் நடத்த பாரிய பணம் படைத்த மத்திய கிழக்கு நாடுகளும், அமெரிக்கா முதலாளிகளும் இடம் அளிப்பார்களா? என்பது மற்றொரு கேள்வி. எனினும் மாற்றங்கள் வரப்போவது நிச்சயமே!
எனவே நாங்கள் கட்டாயமாக முன்னேற வேண்டிய ஒரு கால கட்டத்தில் வாழ்கின்றோம். எம்மைச் சுற்றிப் பல மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன எனத் தெரிவித்தார்.