விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கல், நீர்வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் 19.12.2014 அன்று தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டைச் சமர்ப்பித்து ஆற்றிய உரை
கௌரவ அவைத் தலைவர் அவர்களே, கௌரவ முதல்வர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ உறுப்பினர்களே, மதிப்புக்குரிய செயலாளர்களே, திணைக்கள அதிகாரிகளே, உங்கள் அனைவருக்கும், எங்கள் எல்லோரையும் இயக்குவித்துக் கொண்டிருக்கும் இயற்கை என்னும் பேரன்னைக்கும் என் வணக்கங்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
கௌரவ அவைத் தலைவர் அவர்களே!
எனது அமைச்சின் 2015ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான விவாதத்தை ஆரம்பிப்பதற்கு முன்பதாக, கௌரவம்மிக்க இந்தச் சபையில் எனது அமைச்சுத் துறைகளின் இன்றைய நிலைபற்றி மேலோட்டமாகவேனும் சிலவற்றைக் குறிப்பிடுவது அவசியம் எனக் கருதுகின்றேன்.
வடக்கின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கிய விவசாயம் மூன்று தசாப்த காலப் போரின் விளைவாகச் சீர்குலைந்து போயுள்ளது. போர் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்து விட்டபோதும், வடக்கு மாகாணசபை பொறுப்பேற்று ஒரு வருடங்கள் கடந்துவிட்ட போதும் விவசாயப் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கட்டியெழுப்புவதென்பது எமக்குப் பெரும் சவாலாகவே உள்ளது.
இங்கே காங்கேசன்துறைமுனை தொடக்கம் வடக்கின் எல்லைக் கிராமங்களான கொக்கிளாய் கொக்குத்தொடுவாய்வரை பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள வளம்மிக்க விவசாய பூமி படைமுகாம்களுக்கெனவும் குடியேற்றங்களுக்கெனவும் அரசால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுள்ளது. எல்லைக் காவலர்கள் இல்லாத காரணத்தால் நிலப்பறிப்பு இன்றும் நிகழ்ந்தேறிவருகிறது. இந்தமண் வெறுமனே பயிர் விளையும் வயல்கள் அல்ல எமது விவசாயப் பெருங்குடிகளைப் பொறுத்த வரையில் பொன் விளையும் பூமி. மற்றைய எல்லாத் தொழிற்துறையினருடனும் ஒப்பிடும்போது, பொன்னோடும் பொருளோடும் சீரும் சிறப்புமாக ஒரு காலத்தில் வாழ்ந்தவர்கள் விவசாயிகள்தான். இன்று, பெரும்பாலான விவசாயிகள் மீள முடியாத அளவுக்குக் கடன் சுமையால் அழுந்திக் கொண்டிருக்கிறார்கள். அநேகமானோர் விவசாயத்தைக் கைவிட்டுத் தினக்கூலிகளாக அலைந்து கொண்டிருக்கிறார்கள் பொதுமக்களின் விளைநிலங்கள் மாத்திரம் அல்ல் வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு உரித்தான நிலபுலங்கள்கூடப் படையினர் வசம் உள்ளன, வடக்கின் விவசாயத்தை மேம்படுத்துவதில் காத்திரமான பங்களிப்பை நல்கிவந்த வட்டக்கச்சி விதை உற்பத்திப் பண்ணை, இரணைமடு சேவைக்காலப் பயிற்சி நிலையம், கனகராயன்குளம் தாய்த் தாவரப் பண்ணை, புளியங்குளம் விவசாயப் போதனாசிரியர் அலுவலகம், மன்னார் விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் என்று ஏறத்தாழ 425 ஏக்கர் பரப்பளவு படைத்தரப்பின் ஆளுகையின் கீழேயே உள்ளது.
விடுதலைப்புலிகள் தங்களது காலத்தில் முல்லை மாவட்டத்தில் முத்தையன்கட்டிலும், தேராவிலிலும், மன்னார் மாவட்டத்தில் வெள்ளாங்குளத்திலும் பண்ணைகளைத் திறம்பட நிர்வகித்து வந்தார்கள். திரைகடலோடி அரிய பயிர்த் திரவியங்கள் பலவற்றைக் கொண்டு வந்து சேர்த்தார்கள். ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கினார்கள். இன்று, இந்தப் பண்ணைகளையும், கறையான் புற்றெடுக்கப் பாம்புகள் குடிகொண்ட கதையாகப் படையினரே ஆண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கௌரவ அவைத் தலைவர் அவர்களே!
எமது நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பராமரிப்பின் கீழுள்ள பாரிய நீர்ப்பாசனக் குளங்களான முத்தையன்கட்டுக் குளத்தினது நீரேந்து பரப்பிலும், விசுவமடுக் குளத்தினது நீரேந்து பரப்பிலும் எமது அனுமதியின்றிச் சட்டத்துக்கு முரணாகப் படையினர் பெரும் பண்ணைகள் அமைத்துப் பயிர் செய்து கொண்டிருக்கிறார்கள். எமது மக்களின் விளைநிலங்களிலும், மாகாண அரசுக்கு உரித்தான நிலங்களிலும் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் படையினர் உற்பத்திகளைச் சந்தைக்குக் கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு நிலக்குத்தகை இல்லை, வங்கியில் கடன்பட்டு மாதாமாதம் எங்களது விவசாயிகள் போன்று வட்டி செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை. இதனால், சந்தை மதிப்பை விடக் குறைந்த விலைக்கு வந்தது இலாபம் என்று விற்று வருகிறார்கள். இதனால் எமது விவசாயிகள் தங்களது உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.
கௌரவ அவைத் தலைவர் அவர்களே!
படையினர் எமது நிலங்களில் பயிர் செய்துகொண்டு மாத்திரம் இருக்கவில்லை. எமது பசுக்களில் பால் கறந்து கொண்டும் இருக்கிறார்கள். மன்னராட்சிக் காலத்தில் ஒரு நாட்டின் மீது படையெடுக்கும்போது முதலில் அந்நாட்டின் ஆநிரைகளைக் கவர்ந்து செல்வார்கள் என்று இலக்கிப் பதிவுகள் உள்ளன. அது இங்கும் நிகழ்ந்தேறியிருக்கிறது. கால்நடைவளர்ப்பில் சிறந்து விளங்கிய வன்னிப் பெருநிலப்பரப்பை இராணுவம் முற்றுகையிட்டு மக்களை இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பிய பின்னர் நல்லின மாடுகளையும் ஆடுகளையும் தங்கள் முகாம்களுக்குக் கவர்ந்து சென்றுள்ளார்கள். மீள்குடியேறிய மக்களிடம் இவை முழுமையாக ஒப்படைக்கப்படவில்லை. அது மாத்திரம் அல்ல் இராணுவம் கால்நடைகளின் கடத்தலுக்கும் துணைபோகின்றது. பொதுமக்கள் யாரேனும் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னெரு மாவட்டத்துக்குத் தனது ஒரு கால்நடையையேனும் கொண்டு செல்வதாக இருந்தாற்கூட, கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்திடம் முறையான அனுமதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அம்மாடுகளின் காதுகளில் கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்தின் இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் எடுத்துக் செல்லப்படின் அது கடத்தலாகவே கருதப்பட்டு அப்பொதுமகன் தண்டிக்கப்படுகிறார். கால்நடைத் திருட்டைத் தடுக்கவும், கால்நடைகளிடையே தொற்றுநோய் பரவாமல் இருக்கவுமே இந்த ஏற்பாடு. ஆனால், இங்கு எமது கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்திடம் எவ்வித அனுமதியும் பெறாமல், எங்கிருந்து எப்போது யாரல் எடுத்து வரப்பட்டன என்று தெரியாமல், நூற்றுக்கணக்கான பசுக்கள் அண்மையில் இராணுவத்தின் பங்கேற்புடன் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
கௌரவ அவைத் தலைவர் அவர்களே!
இவ்வளவு பிரச்சினைகளுக்கும் வடக்கில் தேவைக்கு அதிகமாகப் படையினரை அரசாங்கம் நிலை கொள்ள வைத்திருப்பதே காரணம் ஆகும். போர்க்காலத்தில் மிக அதிக எண்ணிக்கையில் தென்னிலங்கை இளைஞர்களையும் யுவதிகளையும் உள்வாங்கிப் படைப்பலத்தைப் உப்பிப் பெருப்பித்த அரசாங்கத்துக்குப் போர் முடிந்த பின்னர் அவர்களை என்ன செய்வதென்று தெரியவில்லை. இதனால் அவர்களை மரக்கறி வியாபாரம்தொடங்கிப் பலசரக்கு வியாபாரம் வரை வாணிபத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.
வடக்கின் யதார்த்தம் இவ்வாறு இருக்கும்போது, எமது மக்களுக்கு நிலக்கடலை விதைகளையும், விதை நெல்லையும், கால்நடைகளையும், கோழிக்குஞ்சுகளையும் வழங்குவது மட்டுமே விவசாய அமைச்சின் பணியாக இருக்க முடியாது. இதை மட்டுமே செய்வதென்றால், இதற்கென அரசசார்பற்ற நிறுவனங்கள் பல இங்கே இருக்கின்றன. இதனால்தான், எம்மைத் தங்களின் பிரதிநிதிகளாகத் தேர்வு செய்து இந்தச் சபைக்கு அனுப்பிய எமது மக்களின் வாழ்வுரிமைகளையும் தொழில் உரிமைகளையும் பறிக்கும் விதமாக அவர்களது நிலங்களில் நிலை கொண்டிருக்கும் படையினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறோம்.
கௌரவ அவைத் தலைவர் அவர்களே!
எதிர்க்கட்சியினர் நாம் இராணுவத்தை வெளியேறச் சொல்வதை விடுத்து அபிவிருத்தியில் அக்கறை காட்ட வேண்டும் என்றும், இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்திச் செய்யக்கூடிவற்றையும் நாம் செய்யாமல் இருப்பதாகக் குற்றம் சாட்டியும் வருகிறார்கள். எங்களுக்கு இருக்கும் அதிகாரம் எத்தகையது என்பது அவர்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. எமது மாகாண விவசாயப் பணிப்பாளரின் கீழ் ஒவ்வொரு மாவட்டங்களுக்கென்றும் பிரதி விவசாயப் பணிப்பாளர்கள் உள்ளார்கள். ஆனால், மத்திய அரசு இப்போது மாவட்டச் செயலகங்களில் மாவட்ட விவசாயப் பணிப்பாளரை நியமித்து எமது பிரதி விவசாயப் பணிப்பாளரின் பணிகளில் தலையீடு செய்து வருகிறது. பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் மூலம் சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் யாவும் மாகாணசபையின் ஆதிக்கத்தின் கீழ் வருகின்றபோதிலும் இதுவரை இக்குளங்கள் எமக்குக் கையளிக்கப்படவில்லை. இதைப்போன்று ஏராளமானவற்றை நாம் பட்டியலிட முடியும். ஆனால், நமக்கு இருக்கின்ற அற்ப அதிகாரங்களையும் ஒதுக்கப்படுகின்ற சொற்பநிதியையும் பயன்படுத்தி எமது சக்திக்கும் மேலாகவே உழைத்து வருகின்றோம் என்று இந்த கௌரவ சபையில் அழுத்திக் கூறிவைக்க விரும்புகிறேன்.
மாகாணசபை தோற்றம் பெற்று ஒரு வருடகாலத்தில் எனது அமைச்சுக்கு உட்பட்ட விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவற்றினுடாக முன்னெடுக்கப்பட்ட செயல் திட்டங்களின் விரிவான அறிக்கை இங்கே வழங்கப்பட்டிருப்பதால்,நேரவிரயம் கருதி அதில் இடம் பெற்றிருப்பவற்றை எனது உரையில் இடம் பெறாதவாறு தவிர்த்துக் கொள்கிறேன்.
கௌரவ அவைத் தலைவர் அவர்களே!
எனது அமைச்சின்கீழ் கடந்த ஒருவருடமாக ஒதுக்கப்பட்டிருந்த விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மற்றும் சுற்றாடல் துறைகளோடு 10.12.2014 இல் இருந்து மேலதிகமாகக் கூட்டுறவு அபிவிருத்தி, நீர்வழங்கல், உணவு வழங்கலும் விநியோகமும் ஆகியதுறைகளும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தத் துறைகளினூடாக நடப்பு 2015ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கென மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையாக (PSDG) நிதிஆணைக்குழவிடம் 1011.75 மில்லியன் ரூபாய்களைக் கோரியிருந்தோம். ஆனால், யானைப்பசிக்குச் சோளப் பொரி போன்று 173 மில்லியன் ரூபாய்களே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரமாண அடிப்படையிலான மூலதன நன் கொடையாக (CBG)13 மில்லியன் ரூபாவும், மீண்டெழும் செலவின நோக்கங்களுக்காக திரட்டிய கொடையாக (டீடழஉம புசயவெ)828.224 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் எனது அமைச்சுக்கு 1014.224 மில்லியன் ரூபா ஒதுக்கீடாகியுள்ளது.
குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையான 173 மில்லியன் ரூபாவும், பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடையான 13 மில்லியன் ரூபாவும் சேர்ந்த 186 மில்லியன் ரூபா மாத்திரமே அபிவிருத்திச் செயற்திட்டங்களுக்கானது ஆகும். இந்நன்கொடை நிதியில் இருந்து அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கென அமைச்சருக்கு 6 மில்லியன் ரூபாய், அமைச்சு அலுவலகத்துக்கு 2 மில்லியன் ரூபாய், விவசாயத் திணைக்களத்துக்கு 84 மில்லியன் ரூபாய், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்துக்கு 43 மில்லியன் ரூபாய், நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு 43 மில்லியன் ரூபாய், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்துக்கு 7 மில்லியன் ரூபாய், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவுக்கு 1 மில்லியன் ரூபா என்றவாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
கௌரவ அவைத் தலைவர் அவர்களே!
இலங்கையின் வேறு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களை அப்படியே வடக்குக்குப் பிரதிபண்ண முடியாது. வடக்கில் தேவைகள் வேறு விதமானவை. இங்கு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது நாம் பல விடயங்களைக் கருத்தில் எடுக்க வேண்டியவர்களாக உள்ளோம். எமது தரைப்பகுதி மயோசின் காலத்துச் சுண்ணாம்புப் பாறைகளாக இருப்பது வடக்குக் கிடைத்த ஒரு பெரும் வரம். பேராறுகளோ, நீர்வீழ்ச்சிகளோ இல்லாத வடக்கில் பெய்கின்ற மழைநீரை மயோசின் பாறைகளில் உள்ள நுண்துளைகளும் வெடிப்புகளும் கீழே வடிய விடுவதால்தான் நிலத்தடி நீர்வளம் என்ற அரிய செல்வம் எமக்குக் கிடைத்துள்ளது. வடக்கில் மனிதக்குடியேற்றங்களுக்கு இந்த நிலத்தடி நீரே காரணம் ஆகும். அதே சமயம், சுண்ணப்பாறைகளின் துளைகள் தற்போது சாபமாகவும் மாறி உள்ளன. செறிவு வேளாண்மை முறையில் நாம் மிதமிஞ்சிப் பயன்படுத்துகின்ற விவசாய இரசாயனங்கள் இந்நுண்துளைகளினூடாகக் கசிந்து நிலத்தடி நீரை மாசுறுத்தி வருகின்றன. குறிப்பாக யாழ் குடாநாட்டின் நிலத்தடி நீரில் விவசாய இரசாயன மாசுகள் அதிகம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், விவசாய அபிவிருத்தியில் சூழலுக்கு இசைவான,இயற்கை அல்லது சேதன வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய கட்டாய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
சுன்னாகம் அனல் மின்நிலையத்தில் இருந்து வெளியேறிய கழிவு எண்ணெய் நிலத்தடி நீரில் கலந்துள்ள அநர்த்தமானது, சுற்றுச்சூழல் நட்புமிக்க மாற்றுச் சக்தி மூலங்களைத் தேடவேண்டிய தேவையை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. புலோப்பளை மற்றும் வள்ளிமுனைப்பகுதிகளில் தலா 10 மெகாவாற் மின்சாரத்தைப் பிறப்பிக்கவல்ல இரண்டு காற்று மின் ஆலைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதும், சங்கானையில் இரண்டு காற்று மின்னாலைகளை அமைப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை சமீபத்தில் அனுமதி வழங்கியிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பூகோள ரீதியாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் வரட்சியான பிரதேசங்கள் மேன்மேலும் வரட்சியடையும் என்று எதிர்வு கூறப்பட்டுவரும் நிலையில் வரட்சியைத் தாக்குப் பிடிக்கக் கூடிய பயிர்களையும், குறைந்தளவு நீர் தேவைப்படுகின்ற பயிர்களையும், நீரை விரயமாக்காத தொழில் நுட்பங்களையும் விவசாய அபிவிருத்தியின் போது கருத்தில் கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். அதேசமயம் பெய்கின்ற சொற்ப மழை தன்னும் பெயராது இருக்கும் நோக்கில் மழைநீர் சேகரிப்புக்கும் குளங்கள் மற்றும் நீர்வரத்துக் கால்வாய்களின் புனரமைப்புக்கும் முன்னுரிமை தரவேண்டியவர்களாக உள்ளோம்.
வடமாகாண சபை உருவாக்கப்படுவதற்கு முன்னர் திட்டமிடப்பட்ட இரணைமடுத்திட்டம் இரணைமடுக்குளப்புனரமைப்பு, இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான குடிநீர் விநியோகம், மற்றும் கழிவகற்று வடிகாலமைப்பு என மூன்று திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டதாக இருந்தது. இப்போது இத்திட்டம் மீளவடிவமைக்கப்பட்டு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் இரணைமடுக் குளத்தைப் புனரமைப்பதற்கும், குடாநாட்டுக்கான குடிநீர் விநியோகத்தை மருதங்கேணியில் இருந்து கடல்நீரைக் குடிநீராக மாற்றி மேற்கொள்ளுவதற்கும், யாழ் மாநகர எல்லைக்குள் கழிவகற்று வடிகால்களை அமைப்பதற்கும், மத்திய அரசின் நீர்வழங்கல் வடிகால் அமைச்சுக்கும், கடன் வழங்குநரான ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும், வடக்கு மாகாண சபைக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. அது மாத்திரம் அல்லாமல், எண்ணெய்க் கழிவால் பாதிக்கப்பட்ட சுன்னாகம் பிரதேசமும் கடல் நீரில் இருந்து குடிநீர் பெறும் இடங்களில் ஒன்றாக உள்வாங்கப்பட்டுள்ளது. பழைய திட்டத்தை மாற்றியமைக்குமாறு கோரியபோது, ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிபோகும் என்று பலராலும் சொல்லப்பட்டுவந்த நிலையில் முன்னர் ஒதுக்கப்பட்டிருந்த தொகையின் இரட்டிப்பு மடங்காக, ஏறத்தாழ 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் புதிய திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
வடக்கு போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாகாணம் என்பதன் அடிப்படையில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், நிர்கதியாக நிற்கும் முன்னாள் போராளிகள் போன்ற தரப்பினரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான அபிவிருத்திட்டங்களை அடையாளம் கண்டு முன்னுரிமைப்படுத்த வேண்டியவர்களாகவும் நாம் உள்ளோம்.
இவையாவற்றையும் கருத்தில் கொண்டு எமது திணைக்களங்களின் தலைவர்கள் தங்கள் திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கான அபிவிருத்தித் திட்டமிடலை வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்தவல்ல நிலைத்து நிற்கும் அபிவிருத்தித் திட்டங்களாக விரைவிலேயே மேற்கொள்வார்கள் என்றும், இதன்போது எமது உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து அவர்களது கருத்துகளும் உள்வாங்கப்படும் என்றும் கூறி எனது உரையை நிறைவு செய்து நடப்பு 2015ஆம் ஆண்டுக்கான பாதீடை கௌரவம்மிக்க சபையினரின் முன்னால் சமர்ப்பிக்கிறேன்.
பொ.ஐங்கரநேசன்
அமைச்சர்
விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி,
உணவு வழங்கல், நீர்வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு
வடக்கு மாகாணம்