நியதிச் சட்டங்களை உருவாக்க தாமதம் ஏன்? வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

நிதி இல்லை, ஆளணிப் பற்றாக்குறை என்று காரணம் கூறாமல் அர்ப்பணிப்புடன் நியதிச் சட்டங்களை துரிதமாக உருவாக்க வேண்டுமென வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

thavarasa-epdp

நேற்று கைதடியிலுள்ள வடமாகாண சபையின் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற வடமாகாண சபைக்கான 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் 2 ஆம் நாள் அமர்வின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

நியதிச் சட்டங்கள் என்பது மிக முக்கியமானவை. அவை இல்லாது எதுவும் செய்யமுடியாது. நியதிச் சட்டமும் நெறிப்படுத்தலுமே மிக முக்கியமானது. முதலமைச்சர் நேற்று தெரிவிக்கையில் ஆளணிப் பற்றாக்குறை என்று சொன்னார். அவ்வாறு சொல்லாது உங்களது நானாவித செலவினங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஆளணியைப் பெற்று அவற்றை உருவாக்க வேண்டும்.

நாம் நியதிச் சட்டம் உருவாக்குவதில் பின்னடைவிலேயே இருக்கிறோம். இந்த வருடத்திலாவது அதைச் செய்யுங்கள். அலுவலக பற்றாக்குறை தீர்க்கப்பட்டு நியதிச் சட்டம் உருவாக்குவது துரிதப்படுத்தப்படவேண்டும். இதேவேளை வல்வெட்டித்துறை நகரசபையின் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ள அதேவேளை அதற்கான ஏதேனும் நடவடிக்கை எடுங்கள். சபையை 3 மாத காலம் முடக்கிவைத்து மீண்டும் அதை புதுப்பித்துள்ளீர்கள். அது உங்கள் அதிகாரம். அதற்கு நடவடிக்கை எடுங்கள்.

அதேபோல இந்திய வீடமைப்புத் திட்டத்தில் குறைபாடுகள் உள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். அதுபோல் நீங்கள் கொடுத்துள்ள வீடமைப்புத் திட்டத்திலும் கள்ளப்பாட்டைச் சேர்ந்த ஒரு செல்வந்தருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts