எமது விடிவுக்காக போராடிய முன்னாள் போராளிகளுக்கும், உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கும் 2015ஆம் ஆண்டில் தனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் உதவிகள் செய்யப்படும் என வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வு கடந்த புதன்கிழமை (17) தொடக்கம் வெள்ளிக்கிழமை (19) வரையில் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இடம்பெற்றது.
மீன்பிடி அமைச்சுக்கு கீழ் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் விவாதம் சபையில் இடம்பெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
முன்னாள் போராளிகளாக இருந்து அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் போரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் உதவிகள் செய்வதற்காக எனது அமைச்சின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு வடமராட்சி கிழக்கு தொடக்கம் முல்லைத்தீவு வரையில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்ட மீனவக்குடும்பங்களுக்கும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் உதவிகள் செய்யவுள்ளோம். வடமாகாணத்திலுள்ள மக்களுக்கு இன, மத பேதமின்றி உதவிகள் செய்யப்படும்.
எனது அமைச்சுக்கு மூலதனச் செலவாக 1,045 மில்லியன் ரூபாய் வேண்டும் எனக்கோரியபோதும், 213 மில்லியன் ரூபாய் மட்டுமே எனது அமைச்சுக்கு மூலதச் செலவாக கிடைத்துள்ளது. நன்னீர் மீன்பிடிக்கு 21 மில்லியன் ரூபாயும், போக்குவரத்துத்துறைக்கு 21 மில்லியன் ரூபாயும், கிராம அபிவிருத்திக்கு 35 மில்லியன் ரூபாயும், மாகாண வீதிகள் அபிவிருத்திக்கு 136 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.