‘வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அதிகாரங்களை பயன்படுத்தாமல் இருப்பது கவலையளிக்கிறது. உடனடியாக முதலமைச்சர் தனது அதிகாரங்களை பயன்படுத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும்’ என ஆளுங்கட்சி உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான விவாதம், இரண்டாவது நாளாக கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை (18) இடம்பெற்றது. இதில் முதலமைச்சர் அலுவலகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான விடயங்களை விவாதிக்கும் போதே, கஜதீபன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘முன்னாள் நீதியரசரான முதலமைச்சர், வடமாகாண மக்கள் தொடர்பில் சரியான முடிவுகளை எடுப்பார் என வடமாகாண மக்களும் நானும் நம்புகின்றோம். ஒவ்வொரு விடயங்களையும் அர்த்தமுள்ளதாக கூறும் முதலமைச்சர், வடமாகாணம் தொடர்பான திட்டங்களை முன்னெடுக்காமல் அமைதியாக இருப்பது கவலையளிக்கின்றது.
அனைத்து விடயங்களையும் ஒழுங்கு முறையில் செய்ய முதலமைச்சர் முன்வர வேண்டும். எல்லாம் கிடைக்க வேண்டும் என்று இல்லாமல், கிடைப்பதை விரும்பி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்’ என அவர் மெலும் தெரிவித்தார்.