தமிழ் பேசும் மக்களனைவரையும் ஒரே நாட்டவர் என்ற ரீதியில் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இணையாக பராமரித்தவர் வருபவர் எமது ஜனாதிபதியே என சிறுதொழில் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்று (18) முல்லைத்தீவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் 2015 ஐந்தாவது தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- சொன்னதை செய்து கொண்டிருப்பவரும் செய்ததை சொல்பவருமான ஒருசெயற்பாட்டாளராக இருக்கும் ஒரு செயற்பாட்டளாரையே நான் உங்கள் மத்தியில் கொண்டு வந்துள்ளேன். 13 ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகவும் அதனை செழுமைப்படுத்தும் விதம் தொடர்பாகவும் நான் முன்னைய ஜனாதிபதிகளான பிரேமதாஸ, டி.பி.விஜயதுங்க, சந்திரிக்கா மற்றும் பிரதமராயிருந்த ரணிலிடம் கூட விவாதித்தேன்.
ஆனால் எவருமே அதை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை. ஆனால் தற்போதய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்ட போது அவராகவே முன்வந்து இச்சட்டத்தினை முன்வைத்தார். இதன் மூலமே நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ள முடியும், தமிழ் மக்களின் நன்மையினை யார் முதன்மையாக கருதுகின்றவர்?
ஆனால் துரதிஷ்டவசமாக வடமாகாண ஆட்சி முறை தமிழ் தேசிய கூட்டமைப்பினரின்கைகளில் விழுந்து விட்டது. ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள். அவர்களுக்கு தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சினை வேண்டும், அதன் மூலமே அவர்கள் தமது ஆட்சியினை கொண்டு செல்வர். ஆடத் தெரியாதவனுக்கு மேடை சரியில்லை என்று கூறுவதைப் போல் அவர்களது செயற்பாடு விளங்குகிறது. வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டின் போது அதிகளவிலான பணத்தினை ஒதுக்கியது வடமாகாணத்திற்கு மட்டுமே.
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அப்பணத்தினைஅபிவிருத்திக்கு பயன்படுத்தவில்லை. அபிவிருத்திக்கு பயன்படுத்தாத அப்பணம் தற்போது அரச திறைசேரிக்கு செல்லப்போகிறது. ஒதுக்கப்பட்ட நிதியை அபிவிருத்திக்கு பயன்படுத்தாமல் வைத்திருந்தவர்கள் ஒருபக்கம், வரவு செலவுத்திட்டத்தில் அதிகளவிலான நிதியை வடமாகாணத்திற்கு ஒதுக்கியவர் இன்னொரு பக்கம், இதன்மூலம் நீங்களே புரிந்து கொள்வீர்கள் எந்தப்பக்கம் நன்மைபயக்கும் சிறந்த பக்கமென.
வடமாகாணத்திற்கு மட்டும் சுமார் 5987.78 மில்லியன் பணத்தொகை ஒதுக்கிய போதும் அதில் செலவு செய்யப்பட்டது. 40 சதவீதம் மட்டுமே மிகுதி திறைசேரிக்கே செல்லவுள்ளது. காக்கை குருவிகளுக்கு கூட வடமாகாண சபை அதிகாரம் கிடைத்தால் சுள்ளிசுள்ளிகளாக சேர்த்தாவது அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டிருக்கும். ஆனால் இன்று வடமாகாண சபையின் ஆட்சி குரங்குகளின் கைகளில் மாட்டிக் கொண்டுவிட்டது.
நிரந்தர அரசியல் ஆட்சியை அடைந்து கொள்வதே எமது அழிவுகளுக்கு கிடைக்கும் பலனாகும். கடந்த காலங்களில் தேர்தலில் செய்த தவறுகளை இம்முறையும் செய்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் நம்பிக்கையுடன் என் பின்னே வாருங்கள் நான் அபிவிருத்தியையே எண்ணக்கருவாக கொண்டுள்ளவரிடம் உங்களை அழைத்துச் செல்கிறேன்.
தமிழ் மக்களை பாதுகாப்பதும் நிச்சயமான கௌரவமான அரசியலைப் பெற்றுக்கொள்வதுமே எனது முதலாவது இரண்டாவது மூன்றாவது முன்னுரிமை மிக்க முக்கியவிடயமாகும். இவற்றைவிடவும் பல அபிவிருத்தி பணிகள் எமது அரசினால் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.
-எமது கடல் பிரதேசத்தில் இந்திய கடற்படையினரை உள்நுழைய விடாதுமெற்கொள்ளும் அபிவிருத்திப்பணி
-கள்ளப்பட்டில் துறைமுகம் அமைக்கும் திட்டம்
-வடமாகாணம் பூராகவும் உள்ள கடலோர 257 கிராமங்கள் அபிவிருத்தி பணி
– நந்திக்கடல் புனரமைப்பு இதன் மூலம் 300 குடும்பங்களுக்குரிய வாழ்வாதார அபிவிருத்தி
– யாழ். பல்கலைக்கழக கடற்துறை அமைப்பு பணி அபிவிருத்தி
– இழந்த உறவுகளுக்கு செலுத்தும் மரியாதையும் முகாம்களிலிருக்கும் உறவுகளைமீட்கும் நடவடிக்கை
– காணிப்பங்கீடு
-அழிந்த 15,000 வீடுகள் புனரமைப்பு
-மின்சாரம் வழங்கும் திட்டம் -அவற்றுள் 60 சதவீதம் பூர்த்தி மிகுதி 40 சதவீதம் வெகுவிரைவில்
-வயல் காணிகள் பங்கீடு
-வேலையற்ற பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்கள்
-சமுர்த்தி முத்திரை எண்ணிக்கை அதிகரிப்பு
என பல்வேறு விதமான அபிவிருத்தி பணிகள் ஜனாதிபதியால் வடகிழக்குமாகாணங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் அமைச்சர் அக்கூட்டத்தில்தெரிவித்துள்ளார்.