Ad Widget

கணவர் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டார்! – மனைவி

தனது கணவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் (வயது 26) முகமாலைப் பகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டார். இதுவரை அவர் குறித்த எந்தத் தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை. இவ்வாறு சாட்சியமளித்தார் பிரபாகரன் பாலேஸ்வரி.

vavuniya-mrs-pirapakaran

ஆணைக்குழுவின் இறுதி நாள் அமர்வு இன்று புதன்கிழமை வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெறுகிறது. இதில் சாட்சியமளித்த குறித்த பெண் நாங்கள் வவுனியா ஈச்சங்குளத்தில் வசித்து வந்தோம். பின்னர் இடம்பெயர்ந்து கிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் குடியேறிய போது எனது கணவர் தொழிலுக்காக வேறு பலருடன் முகமாலைக்குச் சென்றார்.

கடந்த 2006.09.09 அன்று எனது கணவர் முகமாலையில் வேலை செய்துகொண்டிருந்த சமயம் அப்பகுதியை இராணுவத்தினர் சுற்றிவளைத்து அங்கு நின்றவர்களை கைது செய்து சென்றனர் என்று அவருடன் வேலை செய்தவர்கள் மீண்டு வந்து தெரிவித்தனர்.

யுத்தம் முடிந்த பின்னர் 2010 ஆம் ஆண்டு பொலிஸ்நிலையம், மனித உரிமை ஆணைக்குழு என்பவற்றில் நான் முறையிட்டேன். மனித உரிமை ஆணைக்குழுவில் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற பெயருடைய ஒருவர் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் இருக்கிறார் என்று பட்டியல் ஒன்றைக் காண்பித்தனர். எனினும் பின்னர் சில நாட்களில் அவ்வாறு எவரும் இல்லை என மறுத்துவிட்டனர். – என்றார் அந்தப் பெண்.

இதன்போது முகமாலை யாருடைய கட்டுப்பாட்டில் அப்போது இருந்தது என ஆணைக்குழுவினர் கேட்டதற்கு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்றார் அந்தப் பெண்.

Related Posts