கடந்த 12–ந் தேதி ரஜினி நடிப்பில் உருவான ‘லிங்கா’ படம் ரிலீசானது. உலகம் முழுவதும் 4 ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டது. தமிழ்நாட்டில் 700 தியேட்டர்களில் திரையிட்டனர். தெலுங்கு மொழியிலும் இப்படம் ரிலீசானது. அங்கும் நிறைய தியேட்டர்களில் திரையிடப்பட்டது. கேரளாவிலும் கணிசமான திரையரங்குகளில் ரிலீசானது.
ரஜினி 4 வருடங்களுக்கு பிறகு நடித்து நேரடி படமாக வந்ததால் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு டிக்கெட்களும் விற்று தீர்ந்தன.
முதல் நாள் மட்டும் ரூ. 37 கோடி வசூல் குவித்து சாதனை படைத்தது. சிறப்பு காட்சிகள் மூலமும் வசூல் குவிந்தது. உலகம் முழுவதும் மூன்று நாட்களில் ‘லிங்கா’ படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ. 60 கோடி வசூலித்து உள்ளது.
ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட இதர மாநிலங்களில் 3 நாட்களில் ரூ. 26 கோடி வசூலித்து உள்ளது. வெளிநாடுகளில் ரூ. 21 கோடி வசூலாகி உள்ளது. இது ரஜினியின் முந்தைய படமான ‘எந்திரன்’ படத்துக்கு இணையான வசூல் என்கின்றனர்.
இதற்கிடையில் ‘லிங்கா’ படத்தின் திருட்டு சி.டி.க்கள் தமிழகம் முழுவதும் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. திருட்டு சி.டி.க்கள் விற்போரை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைக்குமாறு ரஜினி ரசிகர்களை படக்குழுவினர் கேட்டுக் கொண்டு உள்ளனர். ரசிகர்களும் கடைகளில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.