ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மத்தியில் உணவு கஃபே ஒன்றில் ஆயுததாரி ஒருவர் பணயக் கைதிகளாக மக்களை பிடித்து வைத்திருந்த சம்பவம் பொலிஸாரின் அதிரடி தாக்குதல் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
ஆட்களைப் பிடித்து வைத்திருந்த ஆயுததாரி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன.
49 வயதான இரானிய அகதியான இந்த ஆயுததாரியின் பெயர் மான் ஹரோன் மோனிஸ் என்று பொலிஸார் கூறியிருந்தனர். கடந்த 1996ம் ஆண்டு இவருக்கு அரசியல் தஞ்சம் தரப்பட்டிருந்தது.
பெரும் வெடிச்சத்தங்கள் கேட்க, பணயக் கைதிகள் பலர் பாதுகாப்புக்காக ஓடிவந்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக காண்பிக்கப்பட்டன.
அபாய எச்சரிக்கை மணி ஒலிக்க, பாதிக்கப்பட்ட பலரை அவசர உதவிப் பணியாளர்கள் அழைத்துச் சென்றனர்.
ஆயுததாரியான மான் ஹரோன் மோனிஸ் பல வன்சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தவர்.
வெளிநாடுளில் பணியாற்றி உயிரிழந்த ஆஸ்திரேலிய இராணுவ வீரர்களின் பெற்றோருக்கு துஷ்பிரயோகமான கடிதங்களை அனுப்பியது தொடர்பில் இவர் குற்றவாளி என்றும் ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.