பத்திரிகைகள் பக்கச் சார்பாக இயங்கி, பத்திரிகை பயங்கரவாதத்தை நடத்துகின்றன. உண்மையான செய்திகளை வெளியிடுவதற்கு பத்திரிகைகளுக்கு காசு கொடுக்க வேண்டுமா? என வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் கேள்வி எழுப்பினார்.
வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற போது, வடமாகாண சபை அமர்வில் தான் கூறிய கருத்தொன்றுக்கு அதிகாரிகள் பதில் கூறியதாக பத்திரிகை ஒன்றில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டினார்.
குற்றச்சாட்டை முன்வைத்து தவராசா தொடர்ந்து உரையாற்றுகையில், ‘கடந்த அமர்வில் நான் கூறிய கருத்தொன்றை அதிகாரிகள் கூறியதாக பத்திரிகையொன்றில் செய்தி வெளியிட்டுள்ளனர். இங்கு உறுப்பினர்களின் உரிமை மீறல் இடம்பெற்றுள்ளது’ என்றார்.
சபை நடவடிக்கைகள் தொடர்பில் இவ்வாறான செய்திகளை வெளியிட்டமை தொடர்பில் சபை செயலாளர், சபை நடவடிக்கை குழு மூலம் நடவடிக்கை மேற்கொண்டு, யார் அந்த அதிகாரிகள் என்பது தொடர்பில் அறியவேண்டும். அத்துடன், குறித்த பத்திரிகை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு, விளக்கம் தரமறுத்தால் அந்த பத்திரிகை, வடமாகாண சபையில் செய்தி சேகரிப்பதை தடுக்கவேண்டும் என தவராசா கூறினார்.
தவராசாவின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் உரையாற்றிய அன்ரனி ஜெகநாதன், ‘பத்திரிகைகள் பக்கச்சார்பாக இயங்கி, பத்திரிகை பயங்கரவாதத்தை நடத்துகின்றன. இவ்வாறு பத்திரிகைகள் தொடர்ந்து நடந்துகொண்டால் பத்திரிகைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்தார்.
இந்த கருத்து தொடர்பில் சபையில் எவரும் எதிர்க்கருத்துக்கள் தெரிவிக்காத நிலையில் இது தொடர்பில் விளக்கம் கேட்கவுள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்ததையடுத்து இது தொடர்பான விவாதம் முடிவுக்கு வந்தது.