ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த போது, வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளின் உள்ளக வீதி திருத்தல் மற்றும் வகுப்பறை கட்டிடத்தொகுதி திருத்தல், வர்ணம் பூசுதல் ஆகியவற்றுக்காக 8.87 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தெரிவித்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த விசேட அமர்வு கைதடியிலுள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (11) இடம்பெற்றது. ஜனாதிபதியின் வருகையின் போது, வடமாகாண சபையால் பாடசாலைகளுக்கென அதிகளவு நிதி செலவு செய்யப்பட்டுள்ளது என அறிந்ததாக ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் சபையில் தெரிவித்தார்.
அவரின் கருத்தை ஏற்றுக்கொண்ட கல்வி அமைச்சர், அதன்போதான செலவு விபரங்களை வெளியிட்டார். இதன்போது குறுக்கிட்ட சர்வேஸ்வரன், வடமாகாண சபைக்குள் தேசிய பாடசாலைகள் உள்ளடங்காத போது, அப்பாடசாலைகளுக்கு வடமாகாண சபை எவ்வாறு செலவு செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார். இது தொடர்பான பதிலை அடுத்த அமர்வில் தான் கூறுவதாக கல்வி அமைச்சர் கூற, இது தொடர்பான விவாதம் முடிவுக்கு வந்தது.