சுன்னாகம் பிரதேசத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில், அப்பகுதி மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் அனுப்பியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியின் இந்து விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் ராமச்சந்திர குருக்களுக்கும் (பாபு சர்மா) பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (10) இரவு இடம்பெற்றது.
இந்த சந்திப்பிலேயே பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் எனக்கோரி மகஜரை பாபுசர்மாவிடம் கையளித்தனர். மகஜரை பெற்றுக்கொண்ட பாபு சர்மா, இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்து, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
சுன்னாகம் மின்சார நிலையத்தின் மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவொயில், கிடங்கு வெட்டப்பட்டு நிலத்தில் ஊற்றப்பட்டமையால், அப்பகுதியை சூழவுள்ள கிணறுகளிலும் அயல் கிராமங்களான மல்லாகம், ஏழாலை, கட்டுவன், அளவெட்டி ஆகிய பகுதிகளிலுள்ள கிணறுகளிலும் எண்ணெய் கசிந்தது.
இந்த பிரச்சினை தொடர்பில் தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி உட்பட பாதிக்கப்பட்ட 11 பேரும் தனித்தனியான வழக்குகளை நொர்தேன் பவர் நிறுவனம், மற்றும் உத்துரு ஜனனி திட்டம் ஆகியவற்றுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் பதிவு செய்து அது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது