எமது மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கும் அழிவுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காரணமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றய தினம் (09) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள குளங்களின் புனரமைப்புப் பணிகளை முன்னெடுக்கும் போது ஏற்கனவே திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்து அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படுமெனவும் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய உற்பத்திகளை அறுவடை செய்யும் போது தென்பகுதியிலிருந்து பொருட்களை இங்கு இறக்குமதி செய்வதை தடைசெய்ய வேண்டுமென்பதுடன், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிகளை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இதனைவிடுத்து தென்பகுதியிலிருந்து விவசாய உற்பத்திகளை எமதுபகுதிகளுக்கு இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில் எமது பகுதி விவசாயிகள் பாரிய இடர்பாடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்றும் சுட்டிக்காட்டினார்.
கிளிநொச்சியின் நகர் பகுதியிலுள்ள சிறுவர் பூங்கா அமையப் பெற்றுள்ள காணி தொடர்பில் ஆராய்ந்து உரிய அறிக்கையினை தமக்கு சமர்ப்பிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் அமைச்சர் அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்திற்கு தமிழ்மொழிமூல உத்தியோகத்தர்களை நியமனம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து கால்நடைகளின் இறைச்சிகளை வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை தடுப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பொலிசாருக்கு அமைச்சர் அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
இதேவேளை, கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகளை இனம்கண்டு அவைதொடர்பில் தமது கவனத்திற்குக் தெரியப்படுத்தும் இடத்து அவற்றை சீர்செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுமென இணைத்தலைவர்கள் தெரிவித்தனர்.
பனை அபிவிருத்தி சபையினால் அனுமதி வழங்கப்படும் பனை மரங்களை விட மேலதிகமான பனை மரங்கள் சட்டவிரோதமாக தறிக்கப்படுவதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் பொலிசாருக்கு அமைச்சர் அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
இதனிடையே எமது மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கும் அழிவுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காரணமென சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் இந்த உண்மையை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே நகர அபிவிருத்தி அதிகார சபை, கடல் மற்றும் நன்னீர் மீன்பிடி, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழான வேலைத்திட்டங்கள், சுற்றுசூழல், கிராம மட்ட அபிவிருத்திச் சங்கம், அனர்த்தமுகாமைத்துவம், மாவட்ட சமூக சேவைகள், கைத்தொழில் அபிவிருத்தி சபை, கூட்டுறவு, பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், மீள்எழுச்சி, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட அதேவேளை, குறித்த வேலைத்திட்டங்கள் தொடர்பான விபரங்களை தமக்கு சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் அவர்கள் துறைசார்ந்த அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இடையூறுகளை ஏற்படுத்தியிருந்த போதிலும் இக்கூட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன் ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் அரச திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.