பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதற்காக கிளிநொச்சியில் புதன்கிழமை இடம்பெறவிருக்கும் சர்வதேச மனித உரிமைகள் தின ஒன்றுகூடலில் செம்மஞ்சள் நிற ஆடைகளுடன் கலந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில், அக்கட்சியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திர விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு முழுவதும் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்களும் காணி அபகரிப்புக்களும், முன்னாள் போராளிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான வன்முறைகளும், பெண்கள் சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும், அச்சுறுத்தல்களும் கைதுகளும், தமிழ் மக்கள் மீதான இன அழிப்புகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன்றைய சூழலில் சர்வதேசம் மனித உரிமைகள் தினத்தை கொண்டாட தயாராகி கொண்டிருக்கின்றது.
இம்முறை சர்வதேச சமூகமானது பெண்கள் சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க அணிதிரண்டுள்ளது.
சர்வதேச சமூகத்தோடு கரங்கோர்த்து பெண்கள் சிறுவர் மீதான வன்முறைகளுக்கெதிராக குரல் கொடுப்பதோடு தமிழர் தாயகம் மீதான இராணுவ ஆக்கிரமிப்புக்கெதிராகவும், தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிராகவும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளுக்கெதிராகவும் குரல் கொடுக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் சர்வதேச மனித உரிமைகள் நாள் ஒன்றுகூடலை ஒழுங்குபடுத்தியுள்ளோம்.
இதற்கமைய இந்த ஒன்று கூடல் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.