வடமாகாணத்தில் கடந்த 30 வருடகாலமாக பெண்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறவில்லை என்பதுடன், பெண்கள் இரவு வேளையிலும் தைரியமாக நடமாடித்திரிந்ததாகவும் யாழ். இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தெரிவித்தார்.
யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்தும் விழிப்புணர்வு ஸ்ரிக்கர் நாவலர் கலாசார மண்டபத்தில் திங்கட்கிழமை (08) வெளியிடப்பட்டது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
‘கடந்த 30 வருடகாலமாக பெண்களுக்கு எதிராக வன்முறைகள் இடம்பெறாதிருந்த வடமாகாணத்தில், இன்று ஏன் அதிகளவான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று சமூக ஆர்வலர்களிடம் கேட்டால், 30 வருடகாலமாக அடைக்கப்பட்டிருந்த இளம் சமுதாயத்தினர் தற்போது வெளியில் விடப்பட்டமையே இதற்கு காரணம் எனவும் இதனால், இளம் சமூகத்தினருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் எனவும் கூறுகின்றனர்.
இந்த வன்முறைகள் இடம்பெறுவதற்கு சினிமாக்களும் தொலைக்காட்சி நாடகங்களுமே காரணம் என்று நினைக்கின்றேன். தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் கொடுமைக்காரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். ஆனால், பெண்கள் அவ்வாறு இல்லை. பெண்கள் மிகவும் தைரியமானவர்கள். குறிப்பாக, வடக்கில் பெண்கள் மிகவும் தைரியசாலிகள் என்பதை இந்த உலகம் அறிந்ததே.
ஒரு கையில் குடை பிடித்துக்கொண்டு, மறுகையால் துவிச்சக்கரவண்டி செலுத்தும் பெண்களை வடக்கில் மட்டுமே நான் கண்டுள்ளேன். வேறு எங்கும் இவ்வாறு பெண்கள் செல்வதை காணவில்லை.
பெண்களை ஆண்கள் மரியாதையுடன் பார்க்கவேண்டும். தன் தாயும் ஒரு பெண் என்பதை உணர்ந்து, அதே மரியாதையுடன் பெண்களை ஆண்கள் பார்க்கவேண்டும். இவ்வாறு செயற்பட்டால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை கட்டுப்படுத்தமுடியும்.
பெண்கள் தைரியமாகவும் தன்னம்பிக்கையாகவும் எல்லா விடயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன், சுயகட்டுப்பாடும் பெண்களிடம் வேண்டும் என்பதுடன், ஆண்களும் இதை கடைப்பிடிக்க வேண்டும்’ எனக் கூறினார்.
‘நாம் பெண்களுக்கு எதிரான வன்முறையில் பங்கேற்கும் ஒருவர் அல்ல நீங்கள், வன்முறையற்ற சமுதாயத்தை நோக்கி’ என்ற சுலோகம் அடங்கிய ஸ்ரிக்கர் வெளியிடப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டிகள், தனியார் பேருந்துகள் ஆகியவற்றில் இந்த ஸ்ரிக்கர் ஒட்டும் நடவடிக்கைகள் யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தால் முன்னெடுக்கப்படுகின்றது.