ரஜினியின் ‘லிங்கா’ படம் வருகிற 12–ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் ரஜினி பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளனர். உலகம் முழுவதும் 3500 தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தியிலும் இப்படம் வருகிறது. தணிக்கை குழுவுக்கு சமீபத்தில் படம் அனுப்பி வைக்கப்பட்டது. தணிக்கை குழு அதிகாரிகளும் உறுப்பினர்களும் படத்தை பார்த்து ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் ‘லிங்கா’ படத்துக்கு எதிராக தொடர்ந்து வழக்குகள் தொடரப்படுவது படக்குழுவினர் மத்தியில் தவிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ‘லிங்கா’ படப்பிடிப்பு கர்நாடகாவில் நடந்த போது அங்குள்ள கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டங்களும் நடத்தினர்.
அதன்பிறகு அணைப் பகுதியில் படப்பிடிப்பு நடந்த போதும் அனுமதி அளிக்க மறுத்தனர். அங்குள்ள எம்.எல்.ஏ.வை வைத்து தீவிர முயற்சி எடுத்த பிறகு அனுமதி கிடைத்தது. இப்போது பட வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் படத்துக்கு எதிராக வழக்குகள் தொடரப்படுகின்றன.
மதுரை ஐகோர்ட்டில் ராமரத்தினம் என்பவர் ‘லிங்கா’ படத்தின் கதை தன்னுடையது என்று மனுதாக்கல் செய்தார். ‘முல்லைவனம் 999’ என்ற பெயரில் தான் படம் எடுத்து வருவதாகவும் அந்த கதையை திருடி ‘லிங்கா’ படத்தை எடுப்பதாகவும் எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். இதற்கு ரஜினியும், கே.எஸ்.ரவிக்குமாரும் பதில் மனு தாக்கல் செய்தனர்.
கதையை திருடவில்லை என்றும் விளம்பர நோக்கத்துக்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை தொடர்ந்து மீண்டும் சென்னை 12–வது சிட்டி சிவில் கோர்ட்டில் பி.சக்திவேல் என்பவர் ‘லிங்கா’ படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக் வாழ்க்கையை மையமாக வைத்து உயிர் அணை என்ற பெயரில் கதை எழுதி பதிவு செய்துள்ளேன். எனது உயிர் அணை கதையை தான் லிங்கா பெயரில் எடுக்கின்றனர். எனவே அப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை வருகிற 9–ந்தேதிக்கு தள்ளி வைத்தார். எனவே ‘லிங்கா’ படம் திட்டமிட்டபடி 12–ந்தேதி ரிலீசாகும் என்பதில் கேள்விக் குறி எழுந்துள்ளது.
திட்டமிட்டபடி படம் 12–ந் தேதி ரிலீசாகுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. 9–ந்தேதி கோர்ட்டு உத்தரவை தொடர்ந்தே தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது