சூரி மற்றும் ரோபோ சங்கர் இருவரின் காமெடியில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் ‘சவரிக்காடு’. இதில் கதாநாயகர்களாக ரவீந்திரன், ராஜபாண்டி, கிருஷ்ணகுமார் ஆகிய மூவரும் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு இருவரும் நடிக்கிறார்கள். இப்படத்தை அன்னை தெரசா பிலிம்ஸ் சார்பாக எம்.என்.கிருஷ்ணகுமார் தயாரித்து இயக்கி வருகிறார்.
படத்தைப் பற்றி எம்.என்.கிருஷ்ணகுமார் கூறும்போது, “இந்த படத்தின் ஆரம்பம் சூரி மற்றும் ரோபோ சங்கர் இருவரின் காமெடியில் கலகலப்பாக செல்லும். பின் பாரஸ்ட் ரேஞ்சராக சண்முகராஜன் வந்தபிறகு படம் திரில்லராக செல்லும். சவரிக்காட்டிற்குள் நடக்கும் கதை தான் இது.
இந்த சவரிக்காட்டோட ரகசியங்களை தெருஞ்சுகிட்ட யாரும் இந்த காட்ட விட்டு உயிரோட வெளிய போக முடியாது என்பது மாதிரியான திரைக்கதை அமைத்திருக்கிறோம். இந்த சவரிக் காட்டிற்குள் நடக்கும் திரில் சம்பவங்கள், ரசிகர்கள் ரசிக்கும் விதமாக இருக்கும்.
கொடைக்கானல், பழனி, திண்டுக்கல், உடுமலை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது” என்றார்.