இலங்கை ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இருதரப்பிலும் ஏட்டிக்குப் போட்டியான ஊடகவியலாளர் சந்திப்புகளும் பிரசார நிகழ்வுகளும் தொடங்கியுள்ளன.
இந்தத் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து களமிறங்கியுள்ள பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றால், இலங்கையில் நடந்ததாகக் குற்றம்சாட்டப்படும் போர்க்குற்றங்களுக்காக தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று மகிந்த ஆதரவாளர்கள் பிரசாரம் செய்துவருகின்றனர்.
ஆனால், கொழும்பில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய மைத்திரிபால சிறிசேன, தமது அரசாங்கம் அமைந்தால் மகிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சர்வதேச நீதிமன்ற விசாரணையிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தவுடன், அவரை போர்க்கால குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூறிவருவதாக இலங்கையில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களுக்கு மத்தியிலேயே மைத்திரிபால சிறிசேன இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
‘மகிந்த ராஜபக்ஷவையோ, அவரது குடும்பத்தில் உள்ள ஒருவரையோ, உயிரைப் பணயம் வைத்து விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடிய இராணுவத் தளபதிகள் தொடங்கி எவரையுமோ போர்க்குற்ற நீதிமன்றத்துக்கு கொண்டுபோக இடமளிக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார் மைத்திரிபால.
இலங்கை இராணுவத்தினர் இறுதிப் போரின்போது பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன
‘எங்களின் அரசாங்கத்தின் கீழ், மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் அவரது குடும்பத்திலுள்ள அனைவருக்கும் யுத்தம் புரிந்த இராணுவத் தளபதிகள் தொடங்கி எல்லா இராணுவ வீரர்களுக்கும் நாங்கள் முழுமையான பாதுகாப்பை வழங்குவோம்’ என்றும் கூறினார் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன.
இதனிடையே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அரசாங்கத் தரப்பில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், மேற்குலக நாடுகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிந்து செயற்பட்டிருந்தால் தமது நாட்டின் தலைவர்களும் இராணுவ வீரர்களும் மோசமான அபாயத்தை எதிர்நோக்கியிருப்பார்கள் என்று கூறினார்.
‘எமது நாட்டுக்கு எதிராக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தீர்மானங்கள் கொண்டுவந்தார்கள். அவர்கள் கேட்பவற்றுக்கு இணங்கியிருந்தால்…எமது அரசியல் தலைவர்களும் இராணுவவீரர்களும் மோசமான அச்சுறுத்தல்களையும் சவால்களையும் சந்தித்திருப்பார்கள். நாங்கள் அதனைச் செய்யப்போவதில்லை’ என்றார் வெளியுறவு அமைச்சர் ஜீ்.எல். பீரிஸ்.