ஐ.நா. விசாரணைக்கு அனுமதி மறுத்தால் இலங்கை மீது பொருளாதார தடை!

இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்காவிடின் பொருளாதார தடைகளை விதிக்கும் யோசனையை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்.

பிரிட்டன் பொதுச்சபையின் வெளிவிவகார குழுவே இந்த யோசனையை முன்வைத்துள்ளது.

இந்த விடயம் குறித்து மேலும் அறிய வருவதாவது:

சர்வதேச விசாரணைகள் ஆரம்பமாகி சில மாதங்களாகி விட்டன. ஆனபோதிலும் இலங்கை அரசாங்கம் இதற்கு பல முட்டுக்கட்டைகளையும் தடைகளையும் ஏற்படுத்த முயல்கிறது. அத்துடன் சர்வதேச விசாரணையாளர்களை தனது நாட்டிற்குள் அனுமதிக்கவும் மறுக்கிறது.

இதற்காக இலங்கையின் மீது பொருளாதார தடைகள் உட்பட சகல சாத்தியப்பாடுகளையும் பிரிட்டன் பரிசீலிக்கவேண்டும் என வெளிவிவகாரக் குழு சிபாரிசு செய்துள்ளது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களை இலங்கைக்குள் அனுமதிக்க மறுத்தால், ஐ.நாவுடன் ஒத்துழைக்கும் மனித உரிமைகள் பாதுகாவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறினால், இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை நீக்குவது குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் ஆராயவேண்டும் என பரிந்துரை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸில் முன்னெடுக்கும் விசாரணைக்கு இலங்கையை ஒத்துழைப்பு வழங்கச்செய்வதற்காக இந்தியாவின் புதிய அரசாங்கத்துடனும் பிரிட்டன் பேச்சு நடத்த வேண்டும் என வெளிவிவகார குழு தெரிவித்தது.

Related Posts