மீண்டும் அரசியல் எனும் தனது தாய் வீட்டுக்குள் நுழைய சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு தான் மகிழ்வதாக கண்ணீர் மல்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இன்று நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் இங்கு மேலும் கூறியதாவது,
9 வருட மௌத்தின் பின் மீண்டும் அரசியலில் பிரவேசிக்க தினம் தினம் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் காரணமல்ல. எனக்கு பல கொடுமைகள் இழைக்கப்பட்டது. அவை ஒவ்வொன்றையும் கூற வெட்கமாக உள்ளது, ஆனால் அது இங்கு முக்கியமில்லை.
இங்கு பிரதானமானது நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய தேவை, சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்பி முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.
கொலை, துஷ்பிரயோகங்களே நாட்டில் இடம்பெறுகின்றன. அதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொலிஸாருக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதோடு, எதிர்ப்பவர்களுக்கு இடமாற்றங்கள் உள்ளிட்ட சிக்கல் ஏற்படுகின்றன.
பலர் என்னை பொது வேட்பாளராக களமிறங்க கூறினர். 18வது அரசியல் அமைப்பு சட்டத்தின் படி முடியும் என்றனர்.
ஆனால் மீண்டும் அவ்வாறு போட்டியிட எந்தவொரு அவசியமும் எனக்கு இல்லை, அரசியல் ரீதியாக தேவையான உதவிகளை வழங்கி நாட்டை கட்டியெழுப்ப உதவுவேன். எந்த பதவியும் தேலையில்லை, என்றார்.
இங்கு பேசிய அமைச்சர் ராஜித சேனாரத்தின ”இது எனது அரசியல் வாழ்வில் மகிழ்ச்சியான நாள் என்றார்.அத்துடன் இந்த முடிவு மகிந்த வுக்கு எதிரான முடிவல்ல அவருடய சட்டத்திற்கு எதிரான முடிவு என்றும் கூறினார்.இந்த அரசியல் போர் ஆரம்பிக்கப்பட்டது நிறைவேற்று அதிகார சனாதிபதி முறைமையால் தான் என்றார்.