முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனுக்கும் இடையிலான ஒரு முக்கிய சந்திப்பு நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.
முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவர் வேலுகுமார், உபசெயலாளர் சண் குகவரதன், நிர்வாக செயலாளர் பிரியாணி குணரத்ன ஆகியோரும் கட்சி தலைவர் மனோ கணேசனுடன் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு பற்றி ஊடகங்களுக்கு மனோ கணேசன் தெரிவித்தாவது-
சந்திரிகா குமாரதுங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திலும், அதை தொடர்ந்த இடைக்கால ஆட்சியமைப்பிலும், எதிர்கால அரசமைப்பிலும் முக்கிய பாத்திரம் வகிப்பார் என்ற உறுதியை அவரிடம் இருந்து நேரடியாக பெற்றுக்கொள்ளவே நாம் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டோம்.
உட்கட்சிப் பிரச்சினைகளிலும், தனிநபர்களின் நிகழ்ச்சி நிரல்களிலும் சிக்குண்டு தோல்வியடையக்கூடிய ஒரு தேர்தலில் பங்கு பெற ஜனநாயக மக்கள் முன்னனி தயாரில்லை என நான் அவரிடம் தெரிவித்தேன். அந்த நிலைப்பாட்டிலேயே தானும் இருப்பதாக தெரிவித்த அவர், வெற்றியடையக்கூடிய தனது மாற்று யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டமையினாலேயே தாம் இதில் பங்களிக்க முன்வந்துள்ளார் என எம்மிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் சந்திப்பு மிகவும் திருப்திகரமாக நடைபெற்றது. நேற்று நான் ஊடக மாநாட்டில் சொன்னது போல், இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முற்போக்கு அணியும், ஏனைய அனைத்து கட்சிகளுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்பாகவும், குறிப்பாக தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகவும் ஒப்பீட்டளவில் முன்னேற்றகரமான நிலைப்பாடுகளை கொண்ட சந்திரிகா, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முற்போக்கு அணியை பொது எதிரணியுடன் கொண்டு சேர்ப்பதில் தலைமை பாத்திரம் வகிக்க உறுதி பூண்டுள்ளார் என்பது தெளிவாக, நமது இன்றைய கலந்துரையாடலில் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
எதிரணி பொது வேட்பாளர் யாரென அதிகாரப்பூர்வமற்ற முறையில் முடிவு செய்யப்பட்டு விட்டது. அதுபற்றிய கருத்து பரிமாற்றங்களுக்கு இனி இடமில்லை. பொது வேட்பாளர் யாரென இப்போது பகிரங்கமாக அறிவிக்க முடியாது. நிச்சயமாக வெற்றி பெற்று இந்நாட்டிலே நல்லாட்சியை நிலைநாட்டுவோம் என்ற நம்பிக்கையை நமக்கு தரக்கூடிய வேட்பாளராக அவர் இருக்கின்றார் என்பதை இப்போது தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். இதுபற்றிய நாளை நடைபெறும் எதிரணி கட்சி தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் அது அதிகாரபூர்வமாக நாட்டுக்கு அறிவிக்கப்படும். – என்றார்.