முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உட்பட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகிறது.
வவுனியா, ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து அவர்கள் நால்வரும் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், கெருடமடுவில் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் வீடுபுகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த நால்வரின் கை, கால்களை கட்டிவிட்டு, வீட்டு உரிமையாளரை வாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு 20 லட்சம் ரூபாய் பணத்தையும் 14 பவுண் தங்க நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றனர்.
இதுதொடர்பில் காயமடைந்த வீட்டு உரிமையாளர் மாஞ்சோலை வைத்தியசாலையில் வாக்கு மூலம் அளிக்கையில் –
எனது வீட்டில் கொள்ளையிட்டவர்களில் ஒருவரை தனக்கு தெரியும் என்றும் அவர் முன்னர் இப்பகுதியில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் எனவும் தெரிவித்திருந்தார்.
இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட ஒட்டடுசுட்டான் பொலிஸார் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நான்கு பேரை ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து நேற்று மாலை கைது செய்தனர்.
அவர்கள் முல்லைத்தீவில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போதே சோதனைச்சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பொலிஸ் சார்ஜன்ட் முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றினார் எனவும் தற்போது இடமாற்றலாகி மட்டக்களப்புக்கு சென்றுவிட்டார் எனவும் வழக்கு ஒன்றுக்குச் சாட்சியமளிக்க முல்லைத்த்தீவுக்கு அவர் வந்திருந்த நிலையிலேயே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரியவந்தது.