மஹிந்தோதய புலமைப்பரிசில் நிதியம் ஆரம்பம்!

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மஹிந்தோதய புலமைப்பரிசில் நிதியம் நூறு மில்லியன் ரூபா முதலீட்டில் நேற்று கல்வியமைச்சில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

mahintha-foundation

இந்நிதியத்தை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஒரு மாத சம்பளத்தை அன்பளிப்புச்செய்துள்ளார்.

இலங்கையின் கல்வி வரலாற்று பாதையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் திறமை மிக்க மாணவ சமூகத்தினரை உருவாக்க வேண்டுமென்னும் ஒரே நோக்கிலேயே ஜனாதிபதியவர்களின் பிறந்த தினத்தையொட்டி மஹிந்தோதய புலமைப்பரிசில் நிதியம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருப்பதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவும் தமது ஒருமாத சம்பளத்தினை இந்நிதியத்திற்காக அன்பளிப்பு செய்துள்ளார். பொது நம்பிக்கை திணைக்களத்தினால் மஹிந்தோதய புலமைப் பரிசில் நிதியத்தின் செயற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மஹிந்தோதய பாடசாலை அபிவிருத்தி வேலைத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் தற்போது 422 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. க.பொ.த. உயர்தரத்தில் நவீன தொழில் நுட்பம் கற்கும் 32 ஆயிரம் மாணவர்களுக்கு இதன்கீழ் புலமைப்பரிசில் பெற்றுக்கொடுக்கப்படும்.

நகரங்களிலோ அல்லது கிராமங்களிலோ கல்வியை தொடர முடியாமல் பொருளாதார நிலை குன்றியிருக்கும் மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கு தேவையான நிதியை மாதாந்தம் இந்நிதியம் பெற்றுக் கொடுக்கும். க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கு 2013ஆம் ஆண்டு புதிதாக தகவல் தொழில் நுட்பம் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

அத்துறையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையினை 21 சதவீதத்திலிருந்து 2017 ஆம் ஆண்டில் 40 சதவீதமாக அதிகரிப்பதே எமது இலக்காகும். இந்நிதியத்திற்கூடாக க.பொ.த. உயர் தரத்தில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கையினை 60 சதவீதத்தால் அதிகரிப்போமெனவும் கல்வியமைச்சர் கூறினார்.

Related Posts