தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் இலங்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றுள்ளனர்.
2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை எல்லை தாண்டி வந்தார்கள் என்று கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. இதன் பின்னர் 5 பேர் மீதும் போதைப் பொருள் கடத்தியதாக வழக்கு தொடர்ந்தது இலங்கை கடற்படை.
இந்த வழக்கில் கொழும்பு நீதிமன்றம் அண்மையில் 5 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்தது.
இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன. இதனிடையே 5 மீனவர்களும் அப்பாவிகள் என்றும் கொழும்பில் உள்ள இந்திய தூதரகமே மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.
மேலும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் இலங்கை உச்சநீதிமன்றத்தில் மீனவர்கள் சார்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே திடீரென தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் கருணை அளிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே தயாராக இருப்பதாகவும் மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற்றால்தான் அது சாத்தியம் என்றும் இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று தமிழக மீனவர்களின் மேல்முறையீட்டு மனு இலங்கை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதாக மீனவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ராஜபக்சேவின் கருணை உத்தரவின் அடிப்படையில் மீனவர்களின் தூக்கு ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக்கப்படக் கூடும் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.