இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில், மீண்டும் தீவிரவாதச் செயற்பாடுகள் தலைதூக்குவதற்கு வாய்ப்புள்ளதாக, தீவிரவாதம் தொடர்பான உலகளாவிய ஆய்வு அறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவகம் (Institute for Economics & Peace (IEP) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நோபல் பரிசு பெற்றவர்கள், உலகத் தலைவர்கள் உள்ளிட்டோரின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், இலங்கையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் போர் முடிவுக்கு வந்திருந்தாலும், தீவிரவாதம் தலையெடுக்கும் அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அங்கோலா, பங்களாதேஸ், புரூண்டி, மத்திய ஆபிரிக்க குடியரசு, ஐவரிகோஸ்ட், எதியோப்பியா, ஈரான், இஸ்ரேல், மாலி, மெக்சிகோ, மியான்மார், உகண்டா மற்றும் இலங்கை ஆகிய 13 நாடுகளுமே தீவிரவாதம் தலையெடுக்கும் ஆபத்துள்ள நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
பல்வேறு அரசியல் செயற்பாடுகள், வன்முறை, மற்றும் குழுஉறவு நிலைக் காரணிகள் போன்றவையே தீவிரவாதம் மீளத் தலையெடுப்பதற்கான காரணிகள் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.