யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக வணிக நிர்வாக முதுமாணி கற்கைகள் (எம்.பி.ஏ) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட பீடாதிபதி ரி.வேல்நம்பி, செவ்வாய்க்கிழமை (18) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையிலுள்ள மற்றய பல்கலைக்கழகங்களில் வணிக நிர்வாக முதுமாணி கற்கைகள் ஏற்கனவே இடம்பெற்று வருகின்ற போதும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இதுவரையில் ஆரம்பிக்கப்படாமல் இருந்தது.
இந்த கற்கைநெறி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பது பலரது வேண்டுகோளாக இருந்தது.
அதற்கமைய இந்த கற்கை நெறியை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எமது பீடத்தினூடாக மேற்கொண்டு, கற்கைநெறியில் இணைய விரும்புவர்களின் விண்ணப்பங்களை விண்ணப்பத்தாரிகளிடம் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் கோரியிருந்தோம்.
இதன்போது 150க்கும் மேற்பட்ட விண்ணப்பத்தாரிகள் வணிக நிர்வாக முதுமாணி கற்கை நெறியை கற்பதற்காக விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில் இருந்து 80 பேரை இந்த கற்கைநெறிக்காக தெரிவு செய்துள்ளோம்.
வணிக நிர்வாக முதுமாணி கற்கைகள் நெறியின் அங்குரார்ப்பண நிகழ்வு, முகாமைத்துவ வணிகபீட மண்டபத்தில் புதன்கிழமை (19) இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.