யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் காளான் செய்கை தொடர்பான பயிற்சி எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம், சனிக்கிழமை(15) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டத்தில் தற்போது காளான் கொள்வனவுக்குரிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றது. அத்துடன் காளான் உற்பத்தி தொழில்நுட்பம் மிக இலகுவானதாக காணப்படுகின்றது.
காளானை உற்பத்தி செய்ய பலர் ஆர்வம் காட்டுவதால் இதற்குரிய பயிற்சிகளை வழங்கும் படி கோரியிருந்தனர். அதற்கமைவாக வருகின்ற 18 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகி முழு நாள் பயிற்சி வகுப்பு இடம்பெறும்.
50ற்கும் மேற்பட்டவர்கள் இப் பயிற்சி நெறியில் கலந்துகொள்ளவுள்ளனர். பயிற்சியை பெற விரும்புகின்றவர்கள் யாழ். மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தை தொடர்பு கொண்டு பயிற்சியை பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.