கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஐவர் தொடர்பிலான விவகாரத்தில் தலையிட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை குறைப்பதற்கு அல்லது விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தங்களுக்கு சங்கடத்தை தரக்கூடிய ஆனால் தட்டிக்கழிக்க முடியாத இந்த விடயத்தில் தலையிடுமாறு கேட்பதற்கு என்னை அனுமதிக்கவும். எமது நாட்டுக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய முக்கிய விடயம் மட்டுமல்ல ஒரு முக்கிய நெருங்கிய பெரிய அயல்நாட்டுடனான எமது உறவையும் தளரச்செய்யும். சம்பந்தப்பட்ட நாட்டிலிருந்து ஒரு வேண்டுதல் வருவதற்கு முன்னதாக நாமாகவே முன்வந்து நடவடிக்கையெடுக்க வேண்டும்.
எப்போது தேவையென கருதும் போதெல்லாம் நானாக முன்வந்து சில முக்கிய விடயங்கள் சம்பந்தமாக எனது ஆலோசனைகளை தங்களுக்கு வழங்கியுள்ளேன். நாட்டின் நன்மைகருதி வழங்கப்படும் ஆலோசனைகளில் இதுவும் ஒன்றுதான்.
நாட்டின் சட்டவிதிகளுக்கமைய விதிக்கப்பட்ட மரணதண்டனைதான் ஐந்து இந்திய மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையாகும். ஆனால் இப்பிரச்சினை குறிப்பாக கச்சதீவு பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகளுடன் தொடர்புள்ளமையால் நான் மிகவும் வினயத்துடன் வேண்டுவது தங்களுக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி விதிக்கப்பட்டுள்ள தண்டனையை மேல்நீதிமன்றில் மீள் பரிசீலனைக்குட்படுத்தி, அல்லது தண்டனையை குறைத்து, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகிறேன்.
கச்சதீவு – இலங்கைக்கு கையளிக்கப்பட்டவேளை இந்திய மாநிலங்கள் சில குறிப்பாக தமிழ்நாடு பெரும் எதிர்ப்புக் காட்டியது. கச்சதீவு பற்றி ஸ்ரீரீமதி இந்திராகாந்தி அம்மையார் தெரிவித்ததை நான் ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருந்தேன். கச்சதீவை விடுதலைப் புலிகள் தமது தளமாக பயன்படுத்த வாய்ப்புண்டு என கவலையுற்றதோடு அது பின் நாட்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமெனவும் அறிந்திருந்தார்.
இந்திய சாணக்கியத்திலும், ஜனநாயகத்திலும் இருந்து நாம் கற்க வேண்டியப பல விடயங்கள் உண்டு. கச்சதீவு சம்பந்தமாக நமது நாடு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இந்திய மீனவருக்கு பல உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன. இருந்தும் இன்று கச்சதீவு இலங்கையின் ஏக சொத்தாகும். கச்சதீவு இன்று ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
நான் எப்போதும் கச்சதீவு பிரச்சினை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டுமென விரும்பியவன். மரண தண்டனை விதிக்கப்படட்டுள்ள சம்பவத்துக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பலைகள் மிக விரைவாக வலுவடைந்து வருவதால் மேலும் மோசமான கோரிக்கைகளை முன்வைக்கக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கும். முன்னொரு சந்தர்ப்பத்தில் அரசினுடைய ஆலோசனையை பெற்றே அப்போது உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தற்போது வலுவடைந்துவரும் ஆட்சேபனை அலை சிலசமயம் அரசின் ஆலோசனையை பெறாமலே சுயாதீனமான ஒரு முடிவை உச்ச நீதிமன்றம் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ளவும். ஆகவே மிக அவதானத்துடன் விரைவாக செயற்படும்படி தங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.