சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்ட நிலையில், கொழும்பு மேல் நிதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படாது என ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
தி இந்து பத்திரிகைக்கு தகவல் வழங்கியுள்ள அவர், இந்திய மீனவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதான தீர்மானமொன்று இதுவரையில் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.
எவ்வாறாயினும், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ, மன்னிப்பு வழங்குவார் என பிரதியமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்ததாக தி இந்து பத்திரிகை, நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையிலேயே, மொஹான் சமரநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார். எவ்வாறெனினும், இந்திய மீனவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நீக்கப்பட்டு, அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிப்பதான தீர்மானமொன்றையே ஜனாதிபதி ராஜபக்ஷ மேற்கொள்ளவுள்ளார் என ஜனாதிபதிக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிப்பதாக தி இந்து மேலும் குறிப்பிட்டுள்ளது.