Ad Widget

ஜெயலலிதா 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மக்களின் முதல்வர் என்று அதிமுகவினரால் அழைக்கப்படும் ஜெயலலிதா 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் பிறப்பித்த உத்தரவு அரசாணையாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

jeyaa

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளித்தது. அவருக்கு தண்டனையாக ரூ.100 கோடி அபராதமும், 4 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. கூட்டுச் சதி வழக்கில் தனியாக ஜெயலலிதாவுக்கு மேலும் 6 மாதம் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவரின் தகுதி இழப்புக்கு அரசியல் சட்டம் வகை செய்கிறது. தண்டிக்கப்பட்டதால் செப்டம்பர் 27ம் தேதி முதலே எம்எல்ஏ என்ற தகுதியை ஜெயலலிதா இழந்துவிட்டார்.

முதல்வர் பதவியுடன் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பதவியையும் இழந்த அவரது தகுதியிழப்பு குறித்து முறையான அரசாணை, கடந்த 8ம் தேதி தான் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், செயலாளர் ஜமாலுதீன் ஆகியோரது உத்தரவு, அரசாணையாக தமிழக அரசிதழில் நேற்று தான் வெளியிடப்பட்டது.

அதில், லஞ்ச ஒழிப்புச் சட்டம் 1988 பிரிவு 13 (2)-ன்படி, ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ள நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 191, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ஆகியவற்றின் அடிப்படையில் அவர் தகுதியிழப்பு செய்யப்படுகிறார்.

அவருக்கு தண்டனை வழங்கப் பட்ட 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி முதல், தமிழக சட்டப் பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதியிழப்பு ஆகிறார். தண்டனைக்காலம் மற்றும் அதற்குப் பிந்தைய 6 வருடங்களுக்கும் அவர் தகுதியிழப்பு செய்யப்படுகிறார்.

இந்த உத்தரவு அவரது விடுதலை தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மாறுபடும். எனவே, தற்போதைய நிலையில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி முதல் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ தொகுதி காலியானதாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு மனுக்களில் விடுதலை அல்லது தண்டனையில் மாற்றம் ஏதும் ஏற்படாவிட்டால் ஜெயலலிதாவால் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts