தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். பல்வேறு வெற்றிப் படங்களை வழங்கிய இவர் தற்போது லிங்கா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் அவரது பிறந்த நாளான 12-ந்தேதி ரிலீசாக இருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 2014-ம் ஆண்டின் சிறந்த இந்திய திரையுலக பிரமுகராக ரஜினியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருது, இந்திய திரைப்பட நூற்றாண்டையொட்டி வழங்கப்படுகிறது.
கோவாவில் வரும் 20-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. 20-ம்தேதி நடைபெறும் துவக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு இந்த விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இன்று அறிவித்தார். அமிதாப்பச்சன் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
விழாவில், இந்தியா முழுவதிலும் இருந்து நடிகர்கள் மற்றும் நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் திரையுலகப்பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், முக்கியப்பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். 75 நாடுகளில் இருந்து 179 திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட உள்ளன.