கிளிநொச்சி மாவட்டத்தில் மாங்கல்யத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெண்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. அரியநேத்திரன் விதவைகள் என்று கூறுகிறாரா என ஆளும் கட்சி எம்.பி. யான ஏ.எச்.எம். அஸ்வர் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை வடக்கிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அலரி மாளிகைக்கு 5,000 அழகிய பெண்கள் வருகை தந்திருந்ததாகவும் அவர்களின் புகைப்படம் பத்திரிகைகளில் வெளியாகியிருப்பதாகவும் பத்திரிகை ஒன்றையும் காட்டினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற 2015 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தின் சிறுவர் மகளிர் விவகாரம் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.
அஸ்வர் எம்.பி. இங்கு திருக்குறள் மற்றும் குர்ஆன் ஆகியவற்றை உதாரணம் காட்டி தொடர்ந்தும் உரையாற்றுகையில்
கிளிநொச்சி மாவட்டத்தில் 40 ஆயிரம் விதவைகள் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரியநேத்திரன் எம்.பி. இங்கு கூறுகிறார். ஆனால் 38,750 குடும்பங்களே அங்கு வசிப்பதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்படியானால் கிளிநொச்சியில் மாங்கல்யத்துடன் வாழ்கின்ற பெண்களையும் விதவைகள் என்று அரியநேத்திரன் கூறுகிறாரா என்று கேட்க விரும்புகிறேன்.
புலிகள் தான் இந்நாட்டில் பெண்களை விதவைகளாக ஆக்கினர். ஞாயிறன்று வடக்கிலிருந்து ஐயாயிரம் அழகிய பெண்கள் அலரி மாளிகைக்கு வருகை தந்திருந்தனர். அவர்களின் அழகிய புகைப்படங்கள் பத்திரிகைகளிலும் வெளியாகியிருக்கின்றன. இந்த சபையில் உறுப்பினர் ரோசியும் மிக அழகான சாரி உடுத்தி வருகிறார். அந்த வகையில் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த பெண்களின் பாதுகாவலனாக இருந்து வருகிறார். என்றார்