ஐஸ்கிறீம், யூஸ் தடை – சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கை

யாழ் மாவட்டத்தில் உள்ள ஐஸ்கிறீம், யூஸ் உற்பத்தி நிலையங்களின் சுகாதார நிலையை மேம்படுத்த சுகாதாரத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக பல தரப்பட்ட விமர்சனங்களும் நிலவுகின்றன.

ice-cream

இவ் விடயம் தொடர்பாக சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் நிலத்தடியில் உள்ள சுண்ணாம்புப் பாறையில் உள்ள வெடிப்புக்கள் காரணமாக பெரும்பாலான
கிணறுகள் மாசுபட்ட நிலையிலே உள்ளன. இதனால் யாழ் மாவட்டத்தில் நீர், உணவு மூலம் பரவும் நோய்களான
வயிற்றோட்டம், வயிற்றுளைவு, நெருப்புக்காய்ச்சல் போன்ற நோய்களின் பரம்பல் கடந்த பல வருடங்களாக அதிகமாகக் காணப்படுகின்றது. உதாரணமாக நெருப்புக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 2010ம் ஆண்டு 651 ஆகவும் 2011ம் ஆண்டு 382 ஆகவும் 2012ம் ஆண்டு 435 ஆகவும் 2013ம் ஆண்டு 350 ஆகவும் காணப்பட்டது. இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் விட யாழ் மாவட்டத்திலேயே அதி கூடிய நெருப்பு காய்ச்சல் நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதே போன்று வயிற்றுளைவு நோயாளர்களை எடுத்துக்கொண்டால் 2010ம் ஆண்டு 314 ஆகவும் 2011ம் ஆண்டு
451 ஆகவும் 2012ம் ஆண்டு 266 ஆகவும் 2013ம் ஆண்டு 489 ஆகவும் காணப்பட்டது. இவ் எண்ணிக்கையானது வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை மட்டுமே. இதில் வெளி நோயாளர் பிரிவில் மேற்படி நோய்களிற்காக சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கையும் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கையும் இதில் உள்ளடக்கப்படவில்லை. எனவே உண்மையில் மேற்படி நோய்களால் யாழ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தொகை மேலே குறிப்பிட்ட எண்ணிக்கையை விட பல மடங்காகும்.

எனவே யாழ் மாவட்டத்தில் குடிநீரிற்காகப் பயன்படுத்தப்படும் நீர் ஏதோ ஒரு முறையில் சுத்திகரிக்கப்பட்ட
பின்னரே குடிப்பதற்கு பயன்படுத்தப்பட வேண்டும். கொதித்து ஆற வைப்பதன் மூலம், கிணறுகளிற்கு கிரமமாக குளோரீன் இடுவதன் மூலம் அல்லது நீர் வடிகட்டிகளை பாவிப்பதன் மூலம் அல்லது சூரிய ஒளியின் மூலம் சுத்திகரிப்பதன் மூலம் குடிநீரை சுத்திகரித்து பாவிக்கலாம். இது சம்பந்தமாக சுகாதாரத் திணைக்களம் எப்போதும் பொது மக்களிற்கு அறிவுறுத்தி வந்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் மலக்குழிகளில் இருந்து சுண்ணாம்பு பாறைகளில் உள்ள வெடிப்புக்களின் ஊடாக கிணறுகள்
மாசடைவதை கருத்தில் கொண்டு யாழ் மாவட்ட நீர் வள சபை கூட்டத்தில் 2007ம் ஆண்டு அரசாங்க அதிபர்
தலைமையில் இனி வரும் காலங்களில் மலசல கூடங்களை அமைக்கும் போது உறிஞ்சு குழியுடன் சகல பக்கங்களிலும் சீல் செய்யப்பட்ட மலசலகூடம் அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உள்ளுராட்சி மன்றங்களால் தற்போது இவ்வாறு அமைக்கப்படும் மலசல கூடங்களிற்கே அனுமதி வழங்கப்படுகின்றது.

யாழ் மாவட்டத்தில் உணவு, நீர் மூலம் தொற்றும் நோய்களை கண்காணித்து கட்டுப்படுத்தும் நோக்குடன்
நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக உணவு. நீர் மாதிரிகளை பரிசோதனைக்கு கிரமமாக அனுப்புமாறு மத்திய
சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவினால் எமக்குப் பணிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 09
ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களில் இருந்து ஐஸ்கிறீம் மாதிரிகள் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இம் மாதிரிகளின் பரிசோதனை அறிக்கையில் அவற்றில் கிருமித் தொற்று இருந்ததாகவும் அவை மனித பாவனைக்கு உகந்தவை அல்ல எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. மேலும் இவ்வறிக்கையில் காணப்பட்ட கிருமிகள் சில நீரிலிருந்தும் சில அவற்றை உற்பத்தி செய்யும் போது கையாண்ட மனிதர்களில் இருந்தும் தொற்றுக்குள்ளாகி இருந்தன.

ஐஸ்கிறீமில் உள்ள சீனி. பால். தண்ணீர் என்பன கிருமிகள் விரைவாக பல்கிப் பெருகுவதற்கு உகந்த உணவுப்
பொருளாக அமைகின்றது. ஐஸ்கிறீமில் ஒரு சிறிய கிருமித் தொற்று ஏற்பட்டாலும் சில நாட்களில் அது பல்கிப் பெருகி இலட்சக்கணக்கான கிருமிகளை உருவாக்கும். இதனால் அதனை உண்பவர்களுக்கு பல நோய்களை
ஏற்படுத்தும்.

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் யாழ் மாவட்டத்தில் உள்ள 12 சுகாதார வைத்திய அதிகாரிகளை உள்ளடக்கிய ஓர் பரிசோதனைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு யாழ் மாவட்டத்தில் உள்ள 59 ஐஸ்கிறீம், யூஸ் உற்பத்தி நிலையங்களை பரிசோதனையிட்டது. இதன் போது ஒவ்வொரு நிலையங்களிலிலும் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டன. எனவே அவற்றை நிவர்த்தி செய்யும் வரை உற்பத்தியை நிறுத்தி திருத்தங்களை மேற்கொள்ளும்படி ஒவ்வொரு நிலைய உரிமையாளரிற்கும் தனித்தனியாக கடிதங்கள் அவர்களது நிலையங்களின் குறைபாடுகளின் விபரங்களுடன் வழங்கப்பட்டன. அவற்றை நிவர்த்தி செய்த பின்னர் அவை மீள இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் யாழ் மாவட்ட ஐஸ்கிறீம், யூஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் யாழ்
வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 30ம் திகதி வடமாகாண சுகாதார அமைச்சருடன் ஓர் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் அனைத்தையும் உடனடியாக நிவர்த்தி செய்வது கடினம் என சங்க உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இக்கூட்டத்தில் உடனடியாகச் செய்ய வேண்டிய அடிப்படையான சுகாதாரக் குறைபாடுகளை நிவர்த்தி செய்தால் இந்நிறுவனங்களிற்கு உற்பத்தியை ஆரம்பிக்க அனுமதி வழங்குவதாகவும் ஏனைய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கால அவகாசம் வழங்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. இம் முடிவை ஐஸ்கிறீம், யூஸ் உற்பத்தியாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இதன் அடிப்படையில் கடந்த மாதம் 31ம் திகதி முதல் இன்று வரை (11.11.2014) யாழ் மாவட்டத்தில் 32 ஐஸ்கிறீம், யூஸ் உற்பத்தி நிலையங்கள் சுட்டிக்காட்டப்பட்ட அடிப்படையான சுகாதாரத் திருத்த வேலைகளை மேற்கொண்ட பின்னர் அவர்கள் மீள இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றின் பட்டியல் கீழே தரப்படுகின்றது.

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

1. விதுசா கிறீம் கவுஸ். சங்கானை

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

2. அக்ஸான் ஐஸ்கிறீம், சாவக்சேரி

3. கஜி கூல்பார், கொடிகாமம்

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

04. ராஜா கிறீம் கவுஸ், நல்லூர்

5. ராஜா கிறீம் கவுஸ் உற்பத்தி நிலையம், கோவில் வீதி. நல்லூர்

6. பழமுதிர்சோலை. நல்லூர்

7. றியோ கிறீம் கவுஸ், நல்லூர்

8. ராஜா ஐஸ்கிறீம், நாச்சிமார் கோவில்

9. றோயல் கிறீம் கவுஸ். நல்லூர்

10. லிங்கம் கிறீம் கவுஸ். நல்லூர்

11. லிங்கம் கிறீம் கவுஸ் உற்பத்தி நிலையம். பிறவுன் வீதி

12. லிங்கம் கிறீம் கவுஸ். கஸ்தூரியார் வீதி

13. சூர்யா, நல்லூர்

14. சிவன் கிறீம் கவுஸ், பரமேஸ்வராச் சந்தி

15. அமுல் கிறீம் கவுஸ், யாழ்ப்பாணம்

16. நியூராஜா யாழ்ப்பாணம்

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

17. ஸ்ரீ கிறிஷ்ணா, கரவெட்டி

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

18. சைலோ ஐஸ்கிறீம். நல்லூர்

19. யாழ் கோ பால் நிலையம், நல்லூர்

20. அற்லஸ் ஐஸ்கிறீம். திருநெல்வேலி

21. பரணி கிறீம் கவுஸ் விற்பனை நிலையம். கொக்குவில்

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

22. நாகேஸ் கிறீம் கவுஸ், பருத்தித்துறை

23. ராஜ்கிறீம் கவுஸ், பருத்தித்துறை

24. விஷ்னு ஐஸ்கிறீம். பொலிகண்டி

25. நிதர்சன் கிறீம் கவுஸ். பருத்தித்துறை

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

26. விபூஸ் ஐஸ்கிறீம். ஆனைக்கோட்டை

27. பரணி கிறீம் கவுஸ், மானிப்பாய்

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

28. நியு சந்தோஸ் ஐஸ்கிறீம், உடுவில்

29. ஐங்கரன் ஐஸ்கிறீம், கந்தரோடை

30. நியு சந்திரா ஐஸ்கிறீம், கந்தரோடை

கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு

31.சுஜானாஸ், உரும்பிராய்

32. ரியோ ஐஸ்கிறீம், கோப்பாய்

மேலும் பல நிறுவனங்கள் தமது அடிப்படையான திருத்த வேலைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றன.
அநேகமாக அடுத்த ஓரிரு வார காலப்பகுதிக்குள் பெரும்பாலான நிறுவனங்களிற்கு அவை மீள இயங்குவதற்கான அனுமதி வழங்கப்படும். இப்பரிசோதனை நடவடிக்கையின் போது 09 நிலையங்களிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்நிலையங்கள் தமது திருத்த வேலைகளை நிறைவு செய்த பின்னர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவை மீள இயங்க அனுமதிக்கப்படும். நாம் 32 நிலையங்களை மீள இயங்குவதற்கு அனுமதி வழங்கியது உண்மையல்ல என சிலர் ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையங்கள் உண்மையில் இயங்கி வருகின்றனவா அல்லது மூடப்பட்டுள்ளனவா என்பதை பொது மக்களே நேரில் பார்த்து அறிந்து கொள்ளலாம். இந் நிலையில் ஒரு சில ஐஸ்கிறீம், யூஸ் உற்பத்தியாளர்கள் எந்த வித அடிப்படையான திருத்த வேலைகளும் செய்யாது மீள இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படல் வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்வதுடன் ஊடகங்களிலும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அடிப்படையான சுகாதாரத் திருத்தங்களை மேற்கொள்ளாது எந்தவொரு நிறுவனத்திற்கும் மீள இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts