யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போலி வைத்திய சிகிச்சை நிலையங்கள் இயங்கி வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இயங்கும் சில வைத்திய சிகிச்சை நிலையங்கள் போலியானவை அங்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களும் போலியானவர்கள்.
குறிப்பாக பல் சிகிச்சை நிலையங்கள் மூன்று அவ்வாறு இயங்குகின்றன. அங்கு சிகிச்சை அளிக்கும் போலி வைத்தியர்களின் சிகிச்சையினால் பலர் பாதிக்கபப்ட்டுள்ளனர்.
குறித்த சிகிச்சை நிலையங்களில் போலி வைத்தியர்கள் போலி தாதியர்கள் போலி தொழிநுட்ப உத்தியோகஸ்தர்களே கடமையாற்றுகின்றனர்.
அந்த வைத்திய சிகிச்சை நிலையங்களோ அங்கு வைத்திய சிகிச்சைக்கு பயன்படுத்தும் உபகரணங்களோ சுகாதாரமற்றவை.
அண்மையில் போலி சிகிச்சை நிலையம் ஒன்றில் பல் மிதப்புக்கு சிகிச்சை பெற்று பாதிக்கப்பட்ட ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக வந்திருந்த போது பல் மிதப்புக்காக அவருக்கு போடப்பாட ” கிளிப் ” வேலி அடைப்பதற்கு பயன்படுத்தும் கம்பி கொண்டு தயாரிக்கப்பட்டது என கண்டறியப்பட்டது.
போலி வைத்தியர்கள் மற்றும் போலி வைத்தியசிகிச்சை நிலையம் தொடர்பில் வட பிராந்திய சுகாதார பணிமனை, வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்தும் அவர்கள் இதுவரை எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது இருப்பது கவலை அளிக்கின்றது.
இது தொடர்பில் மக்களும் விழிப்பாக இருக்க வேண்டும். இவ்வாறான சிகிச்சை நிலையங்களில் வைத்தியர்களின் பெயர்களுக்கு முன்பாகவோ அல்லது பெயர்களின் பின்னாலோ பட்டங்கள் எதுவும் இருக்காது. பிரபல வைத்திய நிபுணர்கள் என்றே எழுதி இருப்பார்கள்.
இந்த போலி சிகிச்சை நிலையங்கள் போலி வைத்தியர்கள் தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருப்பதடன் ஊடாகவே அவர்கள் தம்மை பாதுகாத்து கொள்ளலாம் என மேலும் தெரிவித்தனர்.
அத்துடன் யாழ். நகர் பகுதியில் பல மருந்தகங்கள் (பாமசிகள்) அனுமதியின்றி இயங்கி வருகின்றன அவை குறித்தும் அறிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டனர்.