“இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புங்கள்,” என இந்தியாவிடம் கோரியிருக்கிறார். வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
தமிழ்நாட்டுக்கு சென்ற முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று சென்னையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கை தமிழர்கள் அகதிகளாக இந்தியாவில் தங்கியுள்ளனர். 115 முகாம்களில் உள்ள ஒரு லட்சம் பேர் வரையிலும் முகாம்களுக்கு வெளியே தங்கி இருப்பவர்களையும் சேர்த்தால் இரண்டு லட்சம் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் அகதிகளாக உள்ளனர்.
பல ஆண்டுகளாக இங்கு இருந்தும் இந்திய குடியுரிமை இதுவரை இவர்களுக்கு கிடைக்கவில்லை. தங்குமிடம், உணவு உள்ளிட்ட பல்வேறு செலவுகளை இங்குள்ள அரசுதான் செய்து வருகிறது. இலங்கையில் இருந்து அகதிகளாக வெளியேறியவர்கள் இனி நாட்டுக்குத் திரும்ப மாட்டார்கள் என அவர்களுக்கு சொந்தமான நிலங்களை இராணுவத்தினர் அபகரித்து வருகின்றனர்.
தாய்நாட்டின் பூர்வகுடிகளான இரண்டு லட்சம் அகதிகள் இந்தியாவில் இருப்பதால் இலங்கையில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க மக்கள் பிரதிநிதிகளை போதியளவுக்கு எங்களால் தேர்ந்தெடுக்க முடியவில்லை.
இதைப் போக்க இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளை திரும்பி அனுப்ப இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அகதிகளைத் திருப்பி அனுப்புவது குறித்து, மன்மோகன் சிங் பிரதமராக இருந்தேபோது பேச்சு நடத்தினோம். இதையடுத்து, அகதிகளைத் திருப்பி அனுப்ப குழு ஒன்றை இந்திய அரசு அமைத்தது. தற்போது மோடி தலைமையில் புதிய அரசு பதவியேற்று உள்ளது.
அகதிகளைத் திருப்பி அனுப்புவது குறித்து, மோடி அரசுடனும் பேச்சு நடத்தி வருகிறோம். அகதியாக இந்தியாவுக்கு வந்து பல ஆண்டுகளாகின்றன. திரும்பி தாய் நாட்டுக்குப் போனால் தங்களுடைய நிலங்கள் கிடைக்குமா? போதிய பாதுகாப்பு அளிக்கப்படுமா? என்பதால் இங்குள்ள அகதிகள் நாடு திரும்ப அச்சப்படுகின்றனர். இந்த அச்சத்தைப் போக்கி அவர்களது நிலங்களை அவர்களுக்கே அளித்து மீள்குடியமர்வு செய்ய, இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும். இரண்டு லட்சம் அகதிகளை பாதுகாப்பதும் இந்தியாவுக்கு சுமை தான். எனவே தமிழர் நலனுக்காக, அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். என தெரிவித்துள்ளார்
தொடர்புடைய செய்தி
76க்கு பின் இலங்கையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை – முதலமைச்சர் சி.வி