2013 – 2014 ஆம் ஆண்டுக்கான வருமான வரி விபரத்திரட்டுக்களை எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி சமர்ப்பிப்பவர்களுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள யாழ் பிராந்திய பொறுப்பு உதவி ஆணையாளர் திருமதி சு.சர்வேஸ்வரன் திங்கட்கிழமை (10) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வருமான வரி செலுத்துவோர் 2013 – 2014ஆம் ஆண்டுக்கான வருமான வரி விபரத்திரட்டுக்களை எதிர்வரும் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் உரிய வரி கொடுப்பனவுக்கான பணம் செலுத்தும் படிவத்துடன் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
நவம்பர் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எமது அலுவலகம் திறந்திருக்கும் என்பதுடன் யாழ் பிராந்திய அலுவலகம் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்தின் கீழ்த்தளத்தில் அன்றைய தினம் காலை 8.30 தொடக்கம் மாலை 5 மணி வரை வருமான வரி திரட்டுக்களை சமர்ப்பிப்பதற்குரிய விசேட கரும பீடம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் இறைவரித்திணைக்களத்தின் ஏனைய கிளைகளிலோ, கொழும்பு தலைமைக் காரியாலயத்திலோ வருமான வரிக்கோவைகளை வைத்திருப்பவரது (தனிநபர், கம்பனி) விபரத் திரட்டுக்களையும் யாழ். பிராந்திய கிளையில் அன்றைய தினம் பெற்றுக்கொள்வதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன.
வரியை செலுத்தாமலோ அல்லது வரி விபரத்திரட்டை சமர்ப்பிக்காமலோ இருந்தால் தண்டப்பணம் அறவிடுவதற்கான ஏற்பாடுகளுக்கு உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் இடமுண்டு. எனவே, உரிய தினத்தில் வரிக்கொடுப்பனவுடன் வரி விபரத்திரட்டையும் சமர்ப்பித்து, தண்டப்பணம் செலுத்துவதை தவிர்த்து கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.