1970 மற்றும் 80–களில் ரஜினியும் கமலும் நிறைய படங்களில் இணைந்து நடித்தனர். இவர்கள் சேர்ந்து நடித்த அபூர்வராகங்கள், மூன்று முடிச்சு, இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும், 16 வயதினிலே, அலாவுதீனும் அற்புத விளக்கும் உள்ளிட்ட படங்கள் வெற்றிகரமாக ஓடின. அதன்பிறகு இருவரும் தனித்தனியாக பிரிந்து கதாநாயகர்களாக நடித்தனர்.
இருவரையும் சேர்த்து வைத்து மீண்டும் படம் எடுக்க முயற்சிகள் நடந்தும் அது நடக்கவில்லை. எதிர்காலத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு இருப்பதாக கமல்ஹாசன் தற்போது கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–
ரஜினியும் நானும் சேர்ந்து நடித்தால் அந்த படத்தை ரஜினி டைரக்டு செய்ய மாட்டார். நானோ அல்லது வேறு டைரக்டரோ இயக்குவோம். நாங்கள் இணைந்து நடித்தால் அது சுவரஸ்யமான விஷயமாக இருக்கும்.
நான் நடித்த தெனாலி படத்தின் வெள்ளிவிழா நடந்த போது ரஜினி என்னுடன் மோட்டார் ‘பைக்’கில் பயணித்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தினார்.
அவர் பேசும் போது ‘‘கமல் என்னை வைத்து பைக் ஓட்ட துவங்கியதும் நன்றாக ஓட்டவருமா’’ என்று கேட்டேன். அப்போது கமல் அப்படியே கீழே விழுந்தாலும் நான்தான் விழுவேன். உங்களை கீழே விழ விடமாட்டேன் என்றார்.
எங்கள் சினிமா வாழ்க்கையிலும் அப்படித்தான் நடந்தது. அவர் என்னை கீழே விழவிடவில்லை. 1983–ல் சினிமாவை விட்டு வெளியேற முயன்ற போது கமல் எனக்கு சமாதானம் சொன்னார் என்று அந்த விழாவில் ரஜினி குறிப்பிட்டார்.
எனவே நானும் ரஜினியும் சேர்ந்து நடிப்பதற்கான சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து கடந்த 5 வருடமாக பேச்சு வார்த்தை நடக்கிறது. அந்த படத்துக்கான எதிர்பார்ப்புகளை நினைத்து தான் பயமாக இருக்கிறது.
இவ்வாறு கமல் கூறினார்.