சீனாவின் தலைநகரமாக இலங்கை மாறி வருவதோடு கொழும்புத் துறைமுகம் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்டு அரசாங்கம் இந்தியாவுடன் ராஜதந்திர நட்புறவில் விரிசலை ஏற்படுத்திக்கொண்டுள்ளது என நேற்று சபையில் குற்றம் சாட்டிய ஐ.தே. கட்சி எம்.பி. ரவி கருணாநாயக, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஆட்சியில் இந்தியாவுடன் துறைமுகங்கள் தொடர்பாக புதிய உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு – செலவுத் திட்டம் மீதான நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், கப்பற்துறை அபிவிருத்தி மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே ரவி கருணாநாயக எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
இலங்கையின் துறைமுகங்கள் அனைத்தையும் அரசு சீனாவுக்கு வழங்கி விட்டது.கொழும்பு துறைமுகம் சவுத்போர்ட் திட்டத்தின் கீழ் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்று இத்துறைமுகத்திற்கு சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் வந்து போகிறது.இதனால் இந்தியா எமது நாட்டை சந்தேகமாக நோக்குவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது.
அன்று ரணிலின் ஆட்சியில் இந்தியாவுடன் நெருங்கி இங்கு துறைமுகங்களை அபிவிருத்தி செய்வோம்.இரு நாட்டு துறைமுகங்களூடாக வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்றன.
ஆனால், இன்று இலங்கை சீனாவின் தலைநகரமாக மாறி வருகின்றது. கொழும்பு துறைமுகம் உட்பட நாட்டின் துறைமுகங்கள் அனைத்தும் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.
வெகு விரைவில் ரணில் தலைமையில் ஆட்சி மலரும். அதன்போது இந்தியாவுடன் துறைமுகங்கள் தொடர்பாக உடன்படிக்கைகளை செய்து கொண்டு நட்புறவை பேணுவோம் என்றார்.