உலகில் ‘நாடற்றவர்கள்’ என்ற நிலையில் உள்ள மக்களின் துயரத்தை தீர்ப்பதற்கான பத்தாண்டு திட்டமொன்றை ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனம் ஆரம்பிக்கின்றது.
குடியுரிமையோ கடவுச்சீட்டோ இல்லாத நிலையில் உள்ளவர்களே ‘நாடற்றவர்கள்’ என்ற நிலையில் உள்ளனர்.
உலகெங்கிலும் இப்படியான ‘நாடற்றவர்கள்’ என்ற நிலையில் சுமார் ஒரு கோடிப் பேர் இருப்பதாக ஐநா மதிப்பிட்டுள்ளது.
இப்படியான மக்களுக்கு உரிய மருத்துவ வசதிகளோ, போதுமான கல்வி வசதிகளோ அரசியல் உரிமைகளோ இருப்பதில்லை.
அகதி முகாம்களில் பிறக்கும் பிள்ளைகளும் ஒடுக்கப்பட்ட இனக்குழுக்களைச் சேர்ந்தவர்களுமே இந்த ‘நாடற்றவர்கள்’ என்ற நிலையில் இன்றுள்ளனர்.
தமது நிலப்பரப்பில் ‘நாடற்ற’ நிலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க அந்தந்த நாடுகள் முன்வர வேண்டும் என்று ஐநாவின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அண்டோனியோ குத்தரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால் பல நாடுகள் பாரபட்சமான அணுகுமுறைகளை தற்போது குறைத்துவருவதாக அவர் கூறியுள்ளார்.