பதுளை, கொஸ்லந்த, மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ள வடமாகாண சபை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
‘மண் சரிவு அனர்த்தத்தால் 300இற்கும் மேற்பட்டவர்கள் காணாமற்போயுள்ளதுடன், 16பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் மலைய மக்களுக்கு, இந்த இயற்கை அனர்த்தம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளமை அனைவரது உள்ளங்களையும் வேதனையாக்கின்றது.
இவ்வனர்த்தத்தில் உயிரிழந்த சகோதர சகோதரிகள் மற்றும் குழந்தைகளையும் நினைவுறுத்தி வடமாகாண சபையின் சார்பிலும் வடபுலத்திலுள்ள அனைத்து மக்களின் சார்பிலும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்மலான அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்குவதற்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.
இன்று இது பற்றிய சகல நடவடிக்கைகளையும் எமது அலுவலர்கள் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று உதவிகளை வழங்குவார்கள்.
அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் மேற்பார்வையின் கீழ் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்’ என அந்த செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.